வீடு ஒப்படைக்க காலதாமதம் ரூ.1 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
வீடு ஒப்படைக்க காலதாமதம் ரூ.1 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
ADDED : ஆக 16, 2024 01:17 AM
சென்னை:காலதாமதமாக வீட்டை ஒப்படைத்த தனியார் கட்டுமான நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் செலுத்திய தொகையை, 18 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்துவதோடு, 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அமுதன் தாக்கல் செய்த மனு:
காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் கிராமத்தில், 'பிராவிடன்ட் காஸ்மோ நகரம்' என்ற பெயரில், 2,174 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்தை, புரவங்கரா புராஜெக்ட் லிமிடெட் என்ற நிறுவனம் அறிவித்தது.
இதில், 983 சதுரடி பரப்பளவில், தரைதளத்தில் மூன்று படுக்கை அறையுள்ள வீட்டை வாங்க முடிவு செய்து, 2011 ஜூன் 14ல் ஒப்பந்தம் செய்தேன். யு.டி.எஸ்., என்ற பிரிக்கப்படாத பங்கு, 532.87 சதுர அடி.
ஒப்பந்தப்படி, 2012 டிசம்பரில் வீட்டை கட்டுமான நிறுவனம் ஒப்படைத்திருக்க வேண்டும். வீட்டுக்கான விலை முழுதும் செலுத்தியும், திட்டமிட்ட காலத்தில் ஒப்படைக்கவில்லை.
வீட்டுக்கான விலையில் குறிப்பிட்ட தொகையை, எச்.டி.எப்.சி., வங்கியில் கடன் பெற்று, அதற்கு 17,028 ரூபாய் மாத தவணை செலுத்தி வந்தேன். கடந்த 2013 ஜூன் 30 வரை வீட்டை ஒப்படைக்காததால், 14,000 ரூபாய் வாடகையில் குடியிருக்க நேரிட்டது.
ஒதுக்கப்பட்ட கார் பார்க்கிங் பகுதி இடத்தை குறைத்து, அதில் கழிவுநீர் தொட்டி கட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேறு இடத்தில் எனக்கு வீடு ஒதுக்க கோரிய விண்ணப்பத்தையும் ஏற்க மறுத்தனர். விதிகளை மீறி கழிவுநீர் தொட்டி கட்டுவது குறித்து புகார் அளித்தேன்.
புகாரை ஆய்வு செய்து, கட்டுமான நிறுவனத்துக்கு, நகர் ஊரமைப்பு துறை நோட்டீஸ் அனுப்பியது.
எனவே, சேவை குறைபாடுடன் நடந்த கட்டுமான நிறுவனம், 23 லட்சத்து 92,009 ரூபாயை, 24 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். மன உளைச்சல், சேவை குறைபாடுக்கு 1 லட்சம் ரூபாய்; காலதாமதமாக வீட்டை ஒப்படைத்ததால் ஏற்பட்ட வாடகை தொகையுடன் வழக்கு செலவாக, 50,000 ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த மாநில நுகர்வோர் நீதிமன்ற தலைவர் நீதிபதி ஆர்.சுப்பையா பிறப்பித்த உத்தரவு:
வீட்டை காலதாமதமாக வழங்கியதோடு, சேவை குறைபாட்டிலும் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது, புகார்தாரர் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களை பரிசீலித்ததில் தெரியவருகிறது.
எனவே, புகார்தாரருக்கு, 23 லட்சத்து 92,009 ரூபாயை, ஆண்டுக்கு 18 சதவீத வட்டியுடன், கட்டுமானம் நிறுவனம் திருப்பி வழங்க வேண்டும். மன உளைச்சலுக்கு 1 லட்சம் ரூபாயையும்; வழக்கு செலவாக 10,000 ரூபாயையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

