ADDED : மே 17, 2024 01:24 AM
ஈரோடு,:ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வாயிலாக, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகின்றன.
கீழ்பவானி வாய்க்காலை கான்கிரீட் கரை, கான்கிரீட் தளத்துடன் நவீனமாக சீரமைத்தால், 400 கனஅடி வரை தண்ணீரை தினமும் சேமிக்கலாம் என தமிழக நீர்வளத்துறை திட்டமிட்டது.
இதற்காக, 2020ல் 709.6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2023 மார்ச் 1ல் பணியை துவக்கினர்.
பாசனம் பாதிக்கும் என ஒரு தரப்பு விவசாயிகள், திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்; மற்றொரு தரப்பு விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், ஒரு தரப்பு விவசாயிகள், நீர் வளத்துறை அரசாணையை முறையாக நிறைவேற்றவில்லை என்பது உட்பட பல குற்றச்சாட்டுகளை கூறி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, விசாரணை நடக்கிறது.
இந்நிலையில் கடந்த, 13ல் புதிய அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
இதுபற்றி, ஒரு தரப்பு விவசாயிகள் கூறும் போது, 'பழைய அரசாணைப்படி பணிகள் செயல்படுத்தாமல், புதிய அரசாணையில் திட்டத்தின் நோக்கத்தை சிதைத்து, பெயருக்கு திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.
இப்பணி நடந்தாலும் விவசாயம் அல்லாத பணிகளுக்கு தண்ணீர் திருட்டு நடக்கும். கடைமடை வரை தண்ணீர் செல்லாது' என்றனர்.

