பொதுச்செயலர் பெயரை பழனிசாமி பயன்படுத்தக்கூடாது கமிஷனில் புகழேந்தி மனு தேர்தல் கமிஷனில் புகழேந்தி மனு
பொதுச்செயலர் பெயரை பழனிசாமி பயன்படுத்தக்கூடாது கமிஷனில் புகழேந்தி மனு தேர்தல் கமிஷனில் புகழேந்தி மனு
ADDED : ஆக 24, 2024 01:49 AM
சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் என்ற பெயரை பழனிசாமி பயன்படுத்துவதை எதிர்த்து தேர்தல் கமிஷனில், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி மனு அளித்துள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
சென்னை உயர் நீதிமன்றத்தில், பழனிசாமி தன்னை அ.தி.மு.க., பொதுச்செயலர் என பதில் மனுவில் குறிப்பிட்டது தவறு என்று ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், இணை ஒருங்கிணைப்பாளர் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே பழனிசாமி அனுப்பிய கட்சி தொடர்பான முடிவுகளை, தேர்தல் கமிஷன் அதன் கோப்புகளில் மட்டும் எடுத்துக் கொண்டது.
இறுதி வழக்கு அடிப்படையில் தான் ஏற்றுக் கொள்ள முடியும். கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது.
மேலும், டில்லி உயர் நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இரட்டை இலையை பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கி இருந்தாலும், அது நிரந்தரமானது அல்ல. இந்த சூழ்நிலையில், அவர் அவசர செயற்குழுவை கூட்டியது சட்டத்திற்கு புறம்பானது.
எனவே, அவர் கூட்டிய அவசர செயற்குழுவில் எடுத்த முடிவுகளை, தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளபோது, எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியாது. மேலும், பழனிசாமி தன்னை பொதுச்செயலர் என்று குறிப்பிட்டு வருகிறார். அதை, எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.