பா.ஜ., கூட்டணி குறித்து பழனிசாமி முடிவெடுப்பார்: ராஜு
பா.ஜ., கூட்டணி குறித்து பழனிசாமி முடிவெடுப்பார்: ராஜு
ADDED : மார் 06, 2025 10:57 PM
மதுரை:''பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து கால சூழ்நிலைக்கு ஏற்ப அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முடிவெடுப்பார்,'' என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., எத்தனை கட்சியோடு கூட்டணி வைத்தால் என்ன; மக்கள் ஓட்டளிக்க தயாராக இல்லை. ஏற்கனவே, தமிழக அரசியல் கருணாநிதி, ஜெயலலிதா என்றே இருந்தது. மக்களும், இரு தலைவர்களுக்குமாக ஓட்டளித்தனர்.
இப்போது, அந்த நிலை மாறி, ஸ்டாலினா-பழனிசாமியா என பார்க்கின்றனர். இரு தரப்புக்குமாகத்தான் ஓட்டளிப்பர். அதனால், மற்றவர்களுக்கு இங்கு வேலை இல்லை.
அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் தி.மு.க., அரசுக்கு எதிராக உள்ளார்கள். அதனால், அவர்கள் ஓட்டுகள் அனைத்தும் அ.தி.மு.க.,வுக்குத்தான்.
வரும் சட்டசபைத் தேதலில், ஸ்டாலினுக்கு, தி.மு.க., குடும்பத்தை வேறு யாரும் ஓட்டளிக்கப் போவதில்லை.
தி.மு.க.,வில் கனிமொழிக்குக் கூட மரியாதை; முக்கியத்துவம் இல்லை. ஏதாவது பூஜை போடும் நிகழ்ச்சி என்றால், மறக்காமல் அழைத்து முன் வரிசையில் நிறுத்துகின்றனர். அவருக்கே, அக்கட்சியில் மரியாதை அவ்வளவுதான்.
யாருக்கு எந்த வாக்குறுதி கொடுத்தாலும் எம்.ஜி.ஆர்., சொன்னபடி நிறைவேற்றுவார். அதைப்போல் பழனிசாமி உள்ளார். பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி தருவதாக சொன்னார்; சொன்னபடி செய்தார். ஆனால், அவர்கள் நன்றி உணர்வோடு நடந்து கொள்ளவில்லை. பா.ஜ., பக்கம் போய் விட்டனர்.
சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைக்கும் என யூகமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அக்கூட்டணி குறித்து, கால சூழ்நிலைக்கு ஏற்ப பழனிசாமி முடிவெடுப்பார். நாளைக்கே நாமெல்லாம் இறந்து போகப் போவதில்லை. அதே போல, இன்றைக்கே சுடுகாட்டில் சென்று படுத்துக் கொள்ளப் போவதுமில்லை.
இவ்வாறு செல்லூர் ராஜு கூறினார்.