பழனிசாமியுடன் பாண்டியராஜன் சந்திப்பு: ராஜேந்திர பாலாஜி மீது புகார்
பழனிசாமியுடன் பாண்டியராஜன் சந்திப்பு: ராஜேந்திர பாலாஜி மீது புகார்
ADDED : மார் 09, 2025 01:23 AM

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் சந்தித்து, தன்னை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்தது குறித்து புகார் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜிக்கும், பாண்டியராஜனுக்கும் இடையே, மோதல் இருந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன், விருதுநகரில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க வந்த நிர்வாகியை, மேடையிலேயே ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தார்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விருதுநகர் அ.தி.மு.க.,வில் குறுநில மன்னர் போல் ராஜேந்திர பாலாஜி செயல்படுகிறார் என, பாண்டியராஜன் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சிவகாசியில் நடந்த அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, 'நான் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அ.தி.மு.க.,வில் இருப்பவன். லண்டனில் படித்த சிலர், என்னை குறுநில மன்னன் என்கின்றனர். நான் குறுநில மன்னன்தான்.
'நீ பல கட்சி மாறி வந்தவன்; நீ ஏன் குறுக்கே வருகிறாய். போகிற போக்கில் அடித்து தள்ளி விடுவேன். கட்சியில் மரியாதை இல்லை என்று கூறும் நீ, இந்த கட்சிக்கு என்ன செய்தாய் என நினைத்துப் பார்க்க வேண்டும்.
'ஜெயலலிதாவையே தவறாக பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது' என, பாண்டியராஜனை ஒருமையில் பேசி, மிகக் கடுமையாக விமர்சித்தார்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் இருவரும் பகிரங்கமாக மோதிக் கொண்டது, அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பாண்டியராஜன் சந்தித்து பேசினார்.
கட்சி நிர்வாகிகள் மத்தியில், தன்னை ராஜேந்திர பாலாஜி விமர்சித்தது குறித்து, அப்போது புகார் தெரிவித்துள்ளார்.
விருதுநகரைச் சேர்ந்த பாண்டியராஜன், தே.மு.தி.க.,வில் இருந்தபோது, விருதுநகரில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வானவர். அ.தி.மு.க.,வில் இணைந்த பின், சென்னையை அடுத்த ஆவடி தொகுதியில் போட்டியிட்டார்.
இப்போது விருதுநகர் சட்டசபை தொகுதியில், போட்டியிட விரும்பி, அவர் கவனம் செலுத்துவதால், அம்மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜி ஆத்திரமடைந்து, அவரை கட்சியினரிடம் விமர்சித்துள்ளார்.