ADDED : மார் 24, 2024 11:20 PM

பழனி : திண்டுக்கல் மாவட்டம், பழனி திருஆவினன்குடி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 18ல் துவங்கியது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார்.
மார்ச் 23ல் வள்ளி, தெய்வானை, முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம், தொடர்ந்து வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. பங்குனி உத்திர நாளான நேற்று அதிகாலை தீர்த்தம் வழங்குதல் நடக்க, கிரிவீதியில் உள்ள தேரில் சுவாமி எழுந்தருளினார்.
மாலை, 4:04 மணிக்கு ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடிக்க, 'வெற்றிவேல் வீரவேல் முருகனுக்கு அரோகரா' என்ற கோஷத்துடன் தேரை இழுத்தனர். இதன் பின் தேர்க்கால் பார்த்தல் நடந்தது.
பால், திருநீறு, இளநீர் காவடி எடுத்து வந்த பக்தர்கள் அலகு குத்தியபடி மேளதாளத்துடன் கும்மி, தேவராட்டம், ஒயிலாட்டம், கரகாட்டத்துடன் ஆடிப்பாடி வந்தனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கு மண்டபம் வழியே யானை பாதை அடைந்து முருகன் கோவில் சென்றனர்.
அங்கிருந்து படிப்பாதை வழியாக பாத விநாயகர் கோவில், அய்யம்புள்ளி ரோடு வழியே பஸ் ஸ்டாண்ட் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
கூட்டத்தால் பக்தர்கள் ஐந்து மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசித்தனர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களிலும் ஏராளமானோர் காத்திருந்தனர்.

