பஞ்., தலைவர்களின் அதிகாரத்தை ரத்து செய்த கலெக்டர் உத்தரவு செல்லாது
பஞ்., தலைவர்களின் அதிகாரத்தை ரத்து செய்த கலெக்டர் உத்தரவு செல்லாது
ADDED : செப் 17, 2024 05:46 AM

சென்னை : 'தவறான நிர்வாகம், முறைகேடு குற்றச்சாட்டுகளுக்காக, பஞ்சாயத்து தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை வாபஸ் பெற வகை செய்யும் சட்டப்பிரிவை, கலெக்டர்கள் பிரயோகிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், சோமயம்பாளையம், மலுமிச்சம்பட்டி, சிக்கடசம்பாளையம் கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக, காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுகளை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், பஞ்சாயத்து தலைவர்கள் ரங்கராஜ், பழனியம்மாள், விமலா ஆகியோர் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் வி.சிங்காரவேலன், வழக்கறிஞர் என்.சீனிவாசன் ஆஜராகி, “சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரத்தை பயன்படுத்தி, கலெக்டர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மூன்று வழக்குகளிலும் ஒரே மாதிரியான நடைமுறையை கையாண்டுள்ளனர். உத்தரவுகள் பிறப்பிப்பதற்கு முன், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை,” என்றனர்.
கோவை கலெக்டர் தாக்கல் செய்த பதில் மனுவில், 'ஊரக வளர்ச்சி துறையின் கோவை மாவட்ட உதவி ஆணையர் அளித்த அறிக்கைப்படி, மனுதாரர்களுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
'இந்தப் பஞ்சாயத்துகளை திறமையாக, முறையாக நிர்வகிப்பதை உறுதி செய்ய, பஞ்சாயத்து தலைவர்கள் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
காசோலைகளில் பஞ்சாயத்து தலைவர்கள் கையெழுத்திடும் அதிகாரத்தை வாபஸ் பெற, கலெக்டர்களுக்கு அதிகாரம் உள்ளது.
இருப்பினும், தலைவரோ, துணைத் தலைவரோ காசோலையில் கையெழுத்திட மறுப்பதன் வாயிலாக.
எந்த பணிகளையாவது நிறைவேற்ற தாமதம் செய்தாலோ அல்லது ஆணையரோ, பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியோ மேற்கொள்ள வேண்டிய செயலை, பஞ்சாயத்து தலைவர்கள் செய்தால் மட்டுமே, சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை கலெக்டர் பயன்படுத்தலாம்.
நிதி முறைகேடு, தவறான நிர்வாகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக, காசோலையில் கையெழுத்திட பஞ்சாயத்து தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை வாபஸ் பெற அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க, அவசரகால அதிகாரத்தை கலெக்டர் பிரயோகிக்க முடியாது.
இந்த வழக்கை பொறுத்தவரை, மனுதாரர்கள் மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள். அவர்களுக்கு முன்கூட்டி நோட்டீஸ் வழங்கப்படவில்லை; இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது.
மனுதாரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காக, அவசரகால அதிகாரத்தை கலெக்டர் பிரயோகிக்க தேவையில்லை. எனவே, கலெக்டரின் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.
புதிதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், இயற்கை நீதியை பின்பற்றி, மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும். அதேநேரத்தில், அவசரகால அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டும் என்றால், சட்டத்தில் கூறப்பட்டுள்ள சூழ்நிலை இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.