பன்னீர் விடுவிக்கப்பட்ட வழக்கு விசாரணை 22க்கு தள்ளிவைப்பு
பன்னீர் விடுவிக்கப்பட்ட வழக்கு விசாரணை 22க்கு தள்ளிவைப்பு
ADDED : ஏப் 09, 2024 04:40 AM
சென்னை: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்ட உத்தரவை, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை, வரும் 22ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
கடந்த 2001 - 06ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, வருவாய் துறை அமைச்சராக பன்னீர்செல்வம் பதவி வகித்தார். வருமானத்துக்கு அதிகமாக 1.77 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, பன்னீர்செல்வத்துக்கு எதிராக, 2006ல் தி.மு.க., ஆட்சியின் போது, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது; அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்தது.
ஆட்சி மாறியதும் வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி, சிவகங்கை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. அதை ஏற்று, வழக்கில் இருந்து பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினரை விடுவித்து, சிவகங்கை நீதிமன்றம் 2012ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக தாமாக முன்வந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை விசாரணைக்கு எடுத்தார். பன்னீர்செல்வம் தரப்பில், வழக்கறிஞரின் வாதம் ஏற்கனவே முடிந்தது. மற்றவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வாதாட அவகாசம் கோரப்பட்டதை தொடர்ந்து, விசாரணையை வரும் 22ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில், அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த வேலுார் நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, ஜூன் மாதத்துக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்தார்.

