ஊராட்சிகளில் பணிகள் முடக்கம் பன்னீர்செல்வம் கண்டனம்
ஊராட்சிகளில் பணிகள் முடக்கம் பன்னீர்செல்வம் கண்டனம்
ADDED : பிப் 15, 2025 02:29 AM
சென்னை:முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
தமிழகம் முழுதும் உள்ள 38 மாவட்டங்களில், 12,000க்கும் அதிகமான ஊராட்சிகள் உள்ள நிலையில், ஒன்பது மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்து விட்டது. இந்த ஊராட்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கண்காணிப்பில் உள்ள ஊராட்சிகளில், அத்தியாவசியப் பணிகளான குடிநீர் வினியோகம், துாய்மை பணி மேற்கொள்ளுதல், வரி வசூல் செய்தல், தெரு விளக்கு பராமரிப்பு போன்றவற்றை ஊராட்சி செயலர்கள் மேற்கொள்வது வழக்கம். ஆனால், ஆயிரக்கணக்கான ஊராட்சிகளில், செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு செயலர், ஒன்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளை கவனிக்கும் நிலை உள்ளதால், ஊராட்சிகளில் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர பல ஊராட்சிகளில், துாய்மை பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன. இதுதான் தி.மு.க., ஆட்சியின் லட்சணம். தி.மு.க., ஆட்சியில் அனைத்து துறைகளுமே, அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன. கிராமங்களின் வளர்ச்சியில்தான், ஒரு நாட்டின் வளர்ச்சி அடங்கி இருக்கிறது. இதை கருத்தில் வைத்து, ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் மற்றும் துாய்மைப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.