ADDED : செப் 04, 2024 08:11 PM
சென்னை:'டெங்கு காய்ச்சலை தடுக்க, போர்க்கால அடிப்படையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. கடந்த 2020ல் 2,410; 2021ல் 6,039; 2022ல், 6,430; 2023ல், 9,121; நடப்பாண்டு இதுவரை, 11,742 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
அடுத்த மாதம் வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. இந்நோய் பரவ காரணமான, 'ஈடிஸ்' கொசுக்கள், துாய்மையான நீர் தேக்கங்களில் உற்பத்தியாகிறது. எனவே, சாலையோரம் தேங்கி நிற்கும் வெள்ள நீரை, உடனுக்குடன் அரசு அப்புறப்படுத்த வேண்டும். இந்நோய் பரவல் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சைக்கு தேவையான படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும். தேவையான மருந்துகளை இருப்பில் வைத்துக்கொள்ள, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.