'10,000 பேர் கூட இல்லாதவர்கள் தமிழகத்தை ஆள்கின்றனர்!' -
'10,000 பேர் கூட இல்லாதவர்கள் தமிழகத்தை ஆள்கின்றனர்!' -
ADDED : ஜூன் 28, 2024 11:15 PM
சென்னை:'தமிழகத்தை 10,000 பேர் கூட இல்லாதவர்கள் ஆள்கின்றனர் என்பதை உணர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வன்னியர்கள் ஓட்டளிக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த 1952 முதல் பொதுத்தேர்தலில் வன்னியர்களிடம் பெரும் எழுச்சி இருந்தது. அப்போது நடந்த சட்டசபை தேர்தலில், உழவர் உழைப்பாளர் கட்சி, 19 இடங்களிலும், காமன்வீல் கட்சி ஆறு இடங்களிலும் வென்றன.
லோக்சபா தேர்தலில் இரு கட்சிகளுக்கும் ஏழு இடங்கள் கிடைத்தன. அந்த இரு கட்சிகளும், காங்கிரசில் இணைந்து கரைந்து போயின.
அதனால்தான் இப்போது வன்னியர்களுக்கான, 10.50 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக ஆட்சியில் இருப்பவர்களிடம் கையேந்த வேண்டியுள்ளது.
நம்மை ஆள்பவர்கள் அதிகபட்சமாக, 10,000 பேர் கூட இருக்க மாட்டார்கள். நாம் அவர்களிடம் நம் உரிமைக்காக கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தின் தனிப்பெரும் சமுதாயத்தை திட்டமிட்டு ஒதுக்கி வைத்தது, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டநாதன் ஆணைய பரிந்துரைகளை முடக்கி வைத்தது, சாராயக் கடைகளை திறந்து மக்களை மதுவுக்கு அடிமையாக்கியது என, உழைக்கும் மக்களின் அனைத்து வீழ்ச்சிகளுக்கும் தி.மு.க.,வே காரணம்.
ஆரம்பத்தில் எழுச்சியுடன் இருந்தோம்; பின்னர் வீழ்த்தப்பட்டோம். மீண்டும் எழுச்சி பெற்றோம்; மீண்டும் வீழ்த்தப்பட்டோம். இதை இந்த சமுதாயம் உணர மறுப்பது தான் வேதனையளிக்கிறது. விக்கிரவாண்டியிலாவது விழிப்புணர்வு பெற்று ஓட்டளிக்க வேண்டும்.
நம்மை வீழ்த்தியவர்களை நாம் எப்பாடுபட்டாவது வீழ்த்தியாக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

