ADDED : ஆக 30, 2024 02:06 AM
புதுடில்லி:தானியம் சார்ந்த எத்தனால் தயாரிப்பு நிலையங்களுக்கு 23 லட்சம் டன் அரிசியை விற்பனை செய்ய, இந்திய உணவுக் கழகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, கடந்தாண்டு ஜூலையில் உள்நாட்டு சந்தையில் அரிசி விலை அதிகரிப்பதாக கூறி, எத்தனால் உற்பத்திக்கு அரிசி வழங்க அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது அரிசி கையிருப்பு 540 லட்சம் டன்னுக்கும் அதிகமாக உள்ளதால், அடுத்த அறுவடைக் காலத்தில் அரிசி கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக, தற்போது இருப்பை குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, தானியம் சார்ந்த எத்தனால் தயாரிப்பு நிலையங்கள், இம்மாதம் துவங்கி, வரும் அக்டோபர் மாதம் வரை மின்னணு ஏல முறையில் அதிகபட்சமாக 23 லட்சம் டன் வரை அரிசி கொள்முதல் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, எத்தனால் உற்பத்தியில் கரும்புச்சாறு மற்றும் சர்க்கரைப் பாகு ஆகியவற்றை பயன்படுத்த, கடந்த டிசம்பரில் விதித்திருந்த தடையையும், அரசு நீக்கியுள்ளது.
இதையடுத்து, நடப்பு எத்தனால் வினியோக ஆண்டு, அதாவது நடப்பாண்டு நவம்பர் முதல் அடுத்தாண்டு அக்டோபர் வரை, இவற்றை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

