வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி: சூடுபிடித்தது மூங்கில் கூடை தயாரிப்பு
வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி: சூடுபிடித்தது மூங்கில் கூடை தயாரிப்பு
ADDED : மே 07, 2024 05:08 AM

சென்னை: வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், மூங்கில் கூடை தயாரிப்பு தொழில் சூடுபிடித்துள்ளது.
மஹாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், பெரிய வெங்காயம் சாகுபடி நடந்து வருகிறது. இங்கிருந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மூட்டைகளில் வெங்காயம் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
பல்வேறு நாடுகளுக்கு, கப்பல்கள் வாயிலாக வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாட்டில் வெங்காய உற்பத்தி குறையும் என, மதிப்பீடு செய்யப்பட்டதால், கடந்தாண்டு டிசம்பர் 8ம் தேதி, ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதனால், வெங்காயம் விலை கட்டுக்குள் உள்ளது. சென்னையில் கிலோ பெரிய வெங்காயம், 25 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், ஏற்றுமதிக்கு அனுமதி கிடைக்காமல், விவசாயிகள், கமிஷன் ஏஜன்டுகள், ஏற்றுமதியாளர்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில், இலங்கை, வங்கதேசம், பூடான், துபாய், மொரீஷியஸ் போன்ற நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி மொத்தம் 99,150 டன் பெரிய வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, ஏற்றுமதி கண்காணிக்கப்பட உள்ளது. இதேபோல, குஜராத் மாநிலத்தில் இருந்து 2,000 டன், வெள்ளை வெங்காயம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து எடுத்து வரப்படும் வெங்காயத்தையும், அரியலுார், பெரம்பலுார், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் சிறிய வெங்காயத்தையும், சென்னை துறைமுகம் வாயிலாக ஏற்றுமதி செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.
இதனால், செங்குன்றம், சோழவரம் சுற்றுப்பகுதிகளில் உள்ள வெங்காய மண்டிகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.
வெங்காயத்தை காற்றோட்டமாக அனுப்புவதற்கு, மூங்கில் கூடைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஐந்து மாதங்களாக ஏற்றுமதி தடை செய்யப்பட்டதால், மூங்கில் கூடை உற்பத்தி முடங்கியது.
தற்போது, ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், மூங்கில் கூடை தயாரிப்பு பணிகளும் விறுவிறுப்பு அடைந்துள்ளன.