ஓய்வு அதிகாரி ஜாபர்சேட்டின் மனு ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணை
ஓய்வு அதிகாரி ஜாபர்சேட்டின் மனு ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணை
ADDED : ஆக 24, 2024 02:01 AM

சென்னை:சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜாபர்சேட் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது; ஆவணங்களை தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுஉள்ளது.
கடந்த 2006 - 11 தி.மு.க., ஆட்சியின் போது, சென்னை திருவான்மியூரில் வீட்டுவசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாக பெற்றதாக, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜாபர்சேட், அவரது மனைவிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
ரத்து
இந்த வழக்கின் அடிப்படையில், ஜாபர்சேட், அவரது மனைவிக்கு எதிராக, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், 2020ல் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
இதை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் ஜாபர்சேட் மனு தாக்கல் செய்தார். மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ''மனுதாரருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கை, 2019ல் உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.
''அந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ததால், உச்ச நீதிமன்ற வழிகாட்டு தலின்படி அதை ரத்து செய்யலாம்,'' என்றார்.
தள்ளி வைப்பு
இதை ஏற்று, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கான உத்தரவையும் நீதிமன்றத்தில், 'டிக்டேட்' செய்தனர். ஆனால், நீதிபதிகள் கையெழுத்திட்டு உத்தரவாக வெளிவரவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சக்திவேல் அமர்வில், நேற்றைய விசாரணை பட்டியலில் இடம் பெற்றது.
அமலாக்கத்துறை தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜரானார். அவரிடம், இந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்த நீதிபதிகள், ஆவணங்கள் முழுவதையும் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.