நாய்கள் கடித்ததில் சிறுமி காயம்; இழப்பீடு கேட்ட மனு தள்ளுபடி
நாய்கள் கடித்ததில் சிறுமி காயம்; இழப்பீடு கேட்ட மனு தள்ளுபடி
ADDED : ஆக 13, 2024 02:45 AM
சென்னை: விழுப்புரம் மாவட்டம், நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த சோனியா என்பவர் தாக்கல் செய்த மனு:
என் கணவர் ரகு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் பணியாற்றினார். அதனால், பூங்கா வளாகத்தில், கணவர் உடன் நானும், குழந்தையும் தங்கினோம்.
தோட்டப் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டோம். பூங்கா அருகில் வசிக்கும் புகழேந்தி என்பவர், தான் வளர்க்கும் இரண்டு, 'ராட்வீலர்' ரக நாய்களை, பூங்காவுக்குள் கொண்டு வந்தார். அவற்றின் கழுத்தில் சங்கிலி, தோல் பட்டை இல்லை. இரண்டு நாய்களும், என், 5 வயது மகள் மீது பாய்ந்து கடித்தன.
கழுத்தில் சங்கிலி இல்லாததால், அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. உடலில் பல இடங்களில் கடித்ததால், என் மகள் சுயநினைவு இழந்தாள். பொது மக்களின் உதவியால், குழந்தையை மீட்டோம்.
நாய் உரிமையாளரின் அலட்சியத்தால் தான், இந்தச் சம்பவம் நடந்தது.
சம்பவத்துக்குப் பின், பூங்கா வளாகத்தை மூடி விட்டனர். என் கணவரும் வேலை இழந்தார். நாங்கள் நிர்கதியில் உள்ளோம். எனவே, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. இந்தச் சம்பவத்துக்கு, அரசை பொறுப்பாக்க முடியாது எனக்கூறிய நீதிபதி, நாய்களின் உரிமையாளருக்கு எதிரான வழக்கில் புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.
நாய்களின் உரிமையாளரிடம் வேண்டுமானால் இழப்பீடு கோரலாம்; அரசிடம் கோர முடியாது என, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.

