புடவை இருந்த கிடங்கிற்கு 'சீல்' அகற்றக்கோரிய மனு தள்ளுபடி
புடவை இருந்த கிடங்கிற்கு 'சீல்' அகற்றக்கோரிய மனு தள்ளுபடி
ADDED : ஏப் 12, 2024 09:41 PM
சென்னை:ஈரோடு மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு கொடுக்க புடவைகள் வைத்திருந்ததாக, கிடங்கிற்கு வைத்த, 'சீல்' அகற்றக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஈரோடு மாவட்டம் காளிங்கராயன்பாளையம் அருகே, அண்ணாநகரில் உள்ள தனியார் கட்டடத்தில், கடந்த மாதம் 26ம் தேதி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். 161 மூட்டைகளில், 24,150 சேலைகள் வைத்திருந்ததை கண்டுபிடித்து கிடங்கிற்கு சீல் வைத்தனர்.
போலீசில் புகார்
அ.தி.மு.க., வேட்பாளர் அசோக்குமாருக்காக, இந்த சேலைகளை வாங்கி கிடங்கில் வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, சித்தோடு போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில், அசோக்குமார் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிடங்கிற்கு வைத்த சீலை அகற்றவும், சேலை உள்ளிட்ட பொருட்களை வெளியே எடுக்க அனுமதிக்கவும் கோரி, அதன் உரிமையாளர் பாக்கியலட்சுமி யுவராஜ், உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
தமிழ் புத்தாண்டு தினத்தில், ஆற்றல் அறக்கட்டளை வாயிலாக துப்புரவு தொழிலாளிகளுக்கு புடவைகள் வழங்க, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே வாங்கப்பட்டதாகவும், அசோக்குமார் புடவைகளை ஆர்டர் செய்திருந்ததாகவும் மனுவில் கூறப்பட்டது.
ஏற்க முடியாது
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், கிடங்கில் வைத்திருந்ததாகவும், புடவைகள் வாங்கியதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டியும் சீல் வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ''சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சீல் அகற்றக் கோரிய மனுவை ஏற்க முடியாது,'' என்றார். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.

