ADDED : ஏப் 21, 2024 01:15 AM
பொள்ளாச்சி:தமிழகத்தில், லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில், 'மொபைல் போன்' வாயிலாக கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது.
தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. ஓட்டுக்கள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகின்றன.
தமிழகத்தில் இம்முறை அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., என மும்முனை போட்டி நிலவியது. திராவிடக் கட்சிகளுக்கு இணையாக, பா.ஜ.,வினரும் தீவிர பிரசாரம் செய்தனர்.
பரபரப்பான தேர்தல் முடிவடைந்த நிலையில், வாக்காளர்களுக்கு மொபைல் போனில் அழைப்பு வருகிறது.அதில், 'தொகுதி பெயரை குறிப்பிட்டு வாக்காளர்களாகிய நீங்கள்; யாருக்கு உங்களது வாக்கை செலுத்தி உள்ளீர்கள், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., வேட்பாளர்கள் பெயரை சொல்லி அதற்கேற்ப எண்களை அழுத்தவும் என ரெக்கார்டு வாய்ஸ் கேட்கிறது. எதையும் பதிவு செய்யாமல் சிலர் விடுகின்றனர்; சிலர் எண்ணை அழுத்தி கருத்து தெரிவிக்கின்றனர்.
எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள அரசியல் கட்சியிகள் மிகுந்த ஆவலாக இருக்கின்றன.
எந்த வகையிலாவது வாக்காளர்கள் மனநிலையை அறிந்து கொள்ள, அந்தந்த கட்சி ஐ.டி., பிரிவினரால் இதுபோன்ற கருத்துக்கணிப்புகள் நடத்தப்படுகின்றன என கூறப்படுகிறது.

