பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலை அனுமதிக்க கூடாது: ஐகோர்ட்
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலை அனுமதிக்க கூடாது: ஐகோர்ட்
ADDED : செப் 03, 2024 02:19 AM
சென்னை: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' சிலைகள் வைக்க அனுமதிக்கக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலை வைக்க அனுமதி அளிக்க உத்தரவிடும்படி, உயர் நீதிமன்றத்தில் சுரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.
போலீஸ் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார் ஆஜராகி, ''ஒரே இடத்தில், மூன்று அமைப்புகள் சார்பில் அனுமதி கேட்டதால் மறுக்கப்பட்டது.
வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி கோர முடியாது; சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உள்ள சிலைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும்,'' என்றார்.
இதையடுத்து, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை வைக்க அனுமதிக்கக் கூடாது என்றும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான சிலைகளுக்கு அனுமதி அளிக்கவும், நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.