'பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்' தீப்பெட்டி உற்பத்திக்கு ஆதரவாக பார்லி., யில் குரல்
'பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்' தீப்பெட்டி உற்பத்திக்கு ஆதரவாக பார்லி., யில் குரல்
ADDED : ஆக 02, 2024 09:46 PM
'ஒரே ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களின் பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக, பாரம்பரிய தீப்பெட்டி தொழிலில் ஈடுபடுவோரை, ஊக்குவிக்க வேண்டும்' என்று, பார்லிமென்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.
லோக்சபாவில் விருதுநகர் காங்., -எம்.பி.,யான மாணிக்கம் தாக்கூர், பேசியதாவது :
சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபடுவதை தடுப்பதற்கு, மிக தீவிரமான நடவடிக்கைகளை, எடுத்தாக வேண்டும். குறிப்பாக, மக்கள் மத்தியில் பயன்பாட்டில் இருந்துவரும், ஒரே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு, முற்றிலுமாக தடைவிதிக்க வேண்டும்.
இதற்கு பதிலாக, நம் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளை பெருமளவில் பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். இதன் வாயிலாக, சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படுவதோடு பொருளாதார ரீதியிலும் பெரிய அளவில் பலன் கிடைக்கும்.
ஒரே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் லைட்டர்களை பயன்படுத்தியுவுடன், அவற்றை அழிக்க முடியாது. மண்ணோடு மண்ணாக மக்கிப் போக வைக்க முடியாது. இது, சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும். மேலும், காடு மற்றும் வனம் சார்ந்த உயிரினங்களான விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கும், அங்குள்ள சூழலுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
அதே நேரம், பாரம்பரியமாக தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள், சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்ததும் கூட. தீப்பெட்டி தொழிலுக்கு அரசும் மக்களும் ஆதரவளிப்பதன் வாயிலாக, வேலைவாய்ப்பு பெருகும். குறிப்பாக, கிராமப்புற மக்களிடம், இந்த தொழில் மூலம் வருமானம் பெருகும்.
எனவே, பிளாஸ்டிக் லைட்டர்களை இறக்குமதி செய்வதற்கும், விற்பதற்கும், அதை தயாரிப்பதற்கும், தடைவிதிக்க வேண்டும். தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு, வரிச்சலுகை அளிப்பதோடு, கூடுதல் மானியமும் வழங்கி, அத்துறைக்கு ஆதரவை அளிக்க வேண்டும்.
இது தவிர, ஒரே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் லைட்டர்களை பயன்படுத்துவதற்கும், அதற்கு பதிலாக தீப்பெட்டியை பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடுகளை, பொதுமக்களுக்கு அராசுத் தரப்பில் ஏற்பாடு செய்யலாம். ச்ட்ல்க்ள் மத்தியில், விளக்கிச் சொல்லி, இது குறித்த விழிப்புணர்வை, அரசு ஏற்படுத்த வேண்டும்.
தீப்பெட்டி உற்பத்தியை, மேலும் வலுவாக்க, புதுமையான வழிமுறைகளையும், இதற்கான புதிய சந்தைகளையும் கண்டறிவதற்கு, ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்தால், பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதோடு, தீப்பெட்டி தொழிலுக்கு ஊக்கமும் ஆதரவும், கிராமப்புற வேலைவாய்ப்புக்கும் மிகப்பெரிய அளவில், வழி பிறக்கும். இதன் வாயிலாக நாட்டின் பொருளாதாரத்தையும், நம்மால் மேம்படுத்த முடியும்.
இவ்வாறு, அவர், கூறினார்
-நமது டில்லி நிருபர் -