பிரசாரத்தில் கருணாநிதியை விளாசிய 'சாட்டை' அவதூறு வழக்கில் கைது செய்தது போலீஸ்
பிரசாரத்தில் கருணாநிதியை விளாசிய 'சாட்டை' அவதூறு வழக்கில் கைது செய்தது போலீஸ்
ADDED : ஜூலை 11, 2024 10:55 PM
திருச்சி,:விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும், தமிழக அரசு பற்றியும் அவதுாறாக பேசிய, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட அபிநயாவை ஆதரித்து பிரசாரம் செய்தார், அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் சாட்டை துரைமுருகன்.
அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும், தமிழக அரசு குறித்தும் அவதுாறாக பேசியுள்ளார். அந்த பேச்சை, சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க., - ஐ.டி.,விங் செயலர் அருண் என்பவர், துரைமுருகன் மீது, திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, நேற்று காலை, தென்காசியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை கைது செய்து, திருச்சி அழைத்து வந்தனர். திருச்சி சைபர் க்ரைம் போலீஸ் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கைக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து, சென்னையில் நேற்று பேட்டியளித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அவர் அளித்த பேட்டி:
முடிந்தால், அதிகாரத்தில் இருப்போர் என்னை கைது செய்யட்டும். என்னைச் சுற்றி இருப்பவர்களை கைது செய்து, எனக்கு நெருக்கடி கொடுப்பதாக நினைக்கின்றனர். அதனால், சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளனர்.
கருணாநிதியை இப்போது நான் விமர்சிக்கிறேன்.
கருணாநிதி குறித்து கள்ளக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே என்று பாடல் உள்ளது. அந்தப் பாடலைத்தான் சாட்டை துரைமுருகன் பாடியிருக்கிறார். அதற்குதான் வழக்கு; கைது நடவடிக்கை எல்லாம். இப்போது அந்த பாடலை நான் பாடுகிறேன். வழக்குப் போட்டு, என்னை கைது செய்யட்டும்.
'கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி; சதிகாரன் கருணாநிதி' என நான் பாடுகிறேன். என் மீது முடிந்தால் வழக்குப்பதிவு செய்யட்டும். அரசு தரப்பில் பிள்ளைப்பூச்சியை பிடித்து விளையாடுகின்றனர். என்றைக்காவது புலி, சிங்கத்துடன் மோதியதுண்டா?
முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும், அவருடைய அப்பா கருணாநிதியை புனிதர் ஆக்க முயற்சிக்கிறார். கருணாநிதி தமிழினத்திற்கு செய்த துரோகத்தை யாரும் மறக்கத் தயாரில்லை. தமிழர் இன வரலாற்றில், தீய ஆட்சி மற்றும் தீய அரசியலின் துவக்கம் கருணாநிதி காலத்தில்தான். தமிழக அரசியலில் அண்ணாதுரை இருந்தவரை நாகரிகம், கண்ணியம் இருந்தது.
கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின் தான் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, அவதூறு பேச்சுகள். அநாகரிக அரசியல், சாராயம் வந்தது. முன்னாள் முதல்வர் பழனிசாமி குறித்து முதல்வர் ஸ்டாலின், அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது. அதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?
இவ்வாறு சீமான் பேட்டியளித்தார்.

