மோடி 3வது முறையாக பிரதமராக தி.மலையில் அண்ணாமலை வேண்டுதல்
மோடி 3வது முறையாக பிரதமராக தி.மலையில் அண்ணாமலை வேண்டுதல்
ADDED : ஜூன் 02, 2024 02:44 AM

திருவண்ணாமலை:''பிரதமர் மோடி, 3வது முறையாக மீண்டும் பிரதமராக வேண்டி, அருணாசலேஸ்வரரிடம் வேண்டுதல் வைக்கப்பட்டது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு நேற்று வந்த அவர், சுவாமி தரிசனத்துக்குப் பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அருணாசலேஸ்வரர் கோவிலில், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்யப்பட்டது. மீண்டும் மோடி, 3வது முறையாக பிரதமராக ஆட்சியில் அமர, வேண்டுதல் வைக்கப்பட்டது. சிவபெருமான் நிறைவேற்றி கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
'இண்டியா' கூட்டணி, 1ம் தேதி, டில்லியில் கூட்டம் நடத்தப் போவதாக கூறியிருந்தார்கள். அதற்கு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எந்த கட்சியின் பெரிய தலைவர்களும் போகவில்லை. 2ம் கட்ட தலைவர்களேசெல்கின்றனர். காங்., வெளியிட்ட அறிக்கையில், அனுமான எக்ஸிட் போலில், காங்., பங்கேற்காது என கூறியிருக்கிறார்கள். இது, ஓட்டு எண்ணிக்கை முடிவுக்கு முன்பாகவே, காங்., தன் தோல்வியை ஒப்புக்கொள்வது போல் தெரிகிறது.
பிரதமர் மோடி, தனிப்பட்ட நிகழ்வாக, கன்னியாகுமரி வந்து தியானத்திலிருந்தார். விவேகானந்தர் பாறை, விவேகானந்த கேந்திராவின் சொத்து.
அது ஒரு தனியார் சொத்து, மக்கள் எல்லாரும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதற்கு அரசின் அனுமதி, தேர்தல் கமிஷன் அனுமதி தேவையில்லை. கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் பாதுகாப்பாளர்கள் குழு, மக்களுக்கு எந்த இடையூறும் செய்யவில்லை. எதிர்க்கட்சியினர் தான் பொய்யாக கூறிக் கொண்டிருக்கின்றனர்.
ஏ.டி.எஸ்.பி., வெள்ளைதுரையை நேற்று காலை, 'சஸ்பெண்ட்' செய்து, அதை ரத்து செய்துள்ளனர்.
போலீசில் பணிபுரியும் அதிகாரிகளை ஓய்வுபெறும் கடைசி நாளில் 'சஸ்பெண்ட்' செய்வது, அரசியல் காழ்ப்புணர்ச்சியை மட்டுமே காட்டும்.
வெள்ளைதுரையின் செயல்பாடு குறித்த வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் என்ன வழிகாட்டுகிறது என்று பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.

