முகூர்த்த நாளில் 'குரூப் -- 4' தேர்வு வீடியோ பதிவு செய்வதில் சிக்கல்
முகூர்த்த நாளில் 'குரூப் -- 4' தேர்வு வீடியோ பதிவு செய்வதில் சிக்கல்
ADDED : மே 30, 2024 11:28 PM
முக்கியமான முகூர்த்த நாளில் 'குரூப் -- 4' தேர்வு நடக்கவிருப்பதால், தேர்வு மையங்களில் வீடியோ பதிவு செய்வதற்கு தேவையான வீடியோகிராபர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான குரூப் - 4 தேர்வு, ஜூன் 9ல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. நடப்பாண்டில் 6,244 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.
குறைந்தபட்சம், 300லிருந்து 350 தேர்வர்களுக்கு ஒரு மையம் வீதம், தமிழகம் முழுதும் பல ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த தேர்வுகளில், முறைகேடு நடக்காமல் இருப்பதற்கு, அனைத்துத் தேர்வு மையங்களிலும் வீடியோ பதிவு செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் வாரியாக டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்தமும் போடப்படுகிறது.
அரசு ஒப்பந்தப்பணி என்று ஆர்வத்துடன் இந்த டெண்டர்களை எடுத்த பலரும், இப்போது பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர்.
ஏனெனில், குரூப் - 4 தேர்வு நடக்கவுள்ள ஜூன் 9ம் தேதி முக்கியமான வளர்பிறை முகூர்த்த நாளாக அமைந்துள்ளது. அதனால், பெரும்பாலான வீடியோகிராபர்கள், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு ஏற்கனவே, 'புக்' ஆகி விட்டனர்.
சாதாரணமாக ஒரு வீடியோகிராபர், ஒரு திருமண விழாவுக்கு வீடியோ எடுக்கச் சென்றால், 4,000 ரூபாய் அல்லது அதற்கு மேலும் கிடைக்கும். ஆனால், அரசுத்துறை ஒப்பந்தப்பணி என்றால், கான்ட்ராக்டருக்கே ஒரு வீடியோகிராபருக்கான கட்டணமாக, 2,500 ரூபாய் வரை தான் தரப்படும்.
அதில், அதிகாரிக்கு கமிஷன் போக, வாடகைக்கு வரும் வீடியோகிராபருக்கு அதிகபட்சமாக 1,500 ரூபாய் தான் வழங்கப்படும்.
இதனால், திருமணம் போன்ற வைபவங்களை தவிர்த்து விட்டு, அரசுக்காக வீடியோ எடுப்பதற்கு வீடியோகிராபர்கள் முன் வரமாட்டார்கள். இப்போது, குரூப் - 4 தேர்வு நடக்கும் நாளில் இதே சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்வுகளில் முறைகேடு நடக்காமலிருக்க, தேர்வு மையங்களின் நுழைவாயிலில் நடக்கும் சோதனைகள் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள், தேர்வர்களின் முகம், அடையாள அட்டை ஆகியவற்றையும் வீடியோ எடுப்பது கட்டாயமாக உள்ளது.
எதிர்காலத்தில் ஆள் மாறாட்டம், முறைகேடு போன்ற பல புகார்கள் வரும் போது, வீடியோ பதிவு மிக அவசியமாகத் தேவைப்படும்.
இதனால், குரூப் - 4 தேர்வை, முகூர்த்தம் இல்லாத மற்றொரு நாளுக்குத் தள்ளி வைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இனிமேல் மற்றொரு தேதியை அறிவிக்க முடியுமா அல்லது அதே தேதியில் வீடியோ எடுப்பதற்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா என்பதை தேர்வாணையம் தான் விரைவாக முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.
வீடியோ எடுக்காவிடில், அதனால் ஏற்படும் சட்டரீதியான பிரச்னைகளை தேர்வாணையம் சந்திக்க நேரிடும்.
- நமது நிருபர் -