ADDED : ஜூன் 28, 2024 02:31 AM
சென்னை: 'செக்' மோசடி வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புரியாத புதிர், தங்கமீன்கள், தரமணி உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தவர் ஜெ.சதீஷ்குமார். சென்னை தி.நகரில், இவரின், 'ஜெ.எஸ்.கே., பிலிம் கார்ப்பரேஷன்' என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் உள்ளது.
இவர், சினிமா பைனான்சியர் ககன் போத்ராவிடம், பல்வேறு தவணைகளில், 97 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்தத் தொகைக்கு, சதீஷ்குமார் மூன்று காசோலைகளை வழங்கியுள்ளார்.
இந்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது, சதீஷ்குமார் கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்தன. இதையடுத்து, அவர் மீது மூன்று செக் மோசடி வழக்குகளை, சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்றத்தில், ககன் போத்ரா தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே.என்.சந்திரபிரபா அளித்த தீர்ப்பில், சதீஷ்குமாருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தும், கடனாக பெற்ற தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் தரப்பில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக தெரிவித்ததை அடுத்து, ஜூலை 26 வரை தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.

