ADDED : மார் 08, 2025 12:22 AM
சேலம்:தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மையம் சார்பில், சேலம் அஸ்தம் பட்டியில் உள்ள இயக்குநர் அலுவலகம் முன், பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
சட்ட ஆலோசகர் கிருஷ்ணன், நிர்வாகிகள் ராஜலிங்கம், சுந்தரம் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சிறப்பு தலைவர் பெரியசாமி தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக பட்டு வளர்ச்சித்துறையில் அனுமதிக்கப்பட்ட, 854 இளநிலை ஆய்வாளர் பணியிடத்தில் தற்போது, 200 பேர் மட்டுமே இருப்பதால், களப்பணி பெயரளவுக்கே நடக்கிறது. ஆனாலும், அதிகாரிகள் தவறான புள்ளி விபரங்களை வழங்கி, அரசை ஏமாற்றி வருகின்றனர்.
பொதுவாக அரசுத்துறையில், ஏப்., மே மாதங்களில் அலுவலர்கள் இடமாற்றம் நடப்பது வழக்கம். ஆனால், பட்டு வளர்ச்சித்துறையில் கடந்த ஆக., மாதம் 13 பெண் ஊழியர்கள் உட்பட, 25 பேரை இடமாற்றம் செய்து, பழிவாங்கும் போக்கு நடந்திருப்பதை சுட்டிக்காட்டியும் அரசு தரப்பில் இதுவரை நடவடிக்கை இல்லை. தினக்கூலி ஊழியர்கள், 520 பேர் கடந்த, 2010, ஜன.,1ல், சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
அவர்களில் ஓய்வு பெற்ற, 350 பேருக்கு ஓய்வூதியம், பணப்பலன் உள்ளிட்ட எந்த நிதியும் கிடைக்கவில்லை. ஒன்பது ஆண்டுகளாக பணிமூப்பு பட்டியல் வெளியிடாத காரணத்தால், இளநிலை ஆய்வாளர்களுக்கு, உதவி ஆய்வாளர் பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
பட்டு வளர்ச்சித்துறையில், 15 ஆண்டுகள் பணி நிறைவு அல்லது உதவி இயக்குநராக, ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர் மட்டுமே துணை இயக்குநராக பணியாற்ற முடியும். ஆனால், விதிமீறி, உதவி இயக்குநர்களுக்கு முழு கூடுதல் பொறுப்பாக, துணை இயக்குநர் பதவி வழங்கி முறைகேடு நடந்துள்ளது.
மேலும், பட்டு வளர்ச்சித்துறை வழங்கும் தளவாடம், உபகரணங்கள் தரமற்று, உபயோகப்படுத்த முடியாத நிலையில் கிடப்பதால், அதற்கு பதிலாக மானியமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.