'சமக்ரா சிக் ஷா' திட்ட நிதியை வழங்குங்க: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
'சமக்ரா சிக் ஷா' திட்ட நிதியை வழங்குங்க: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
ADDED : ஆக 28, 2024 05:46 AM

சென்னை : 'சமக்ரா சிக் ஷா' திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை, விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
தமிழகம் மற்றும் சில மாநிலங்களுக்கு, 'சமக்ரா சிக் ஷா' திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய, முதல் தவணை நிதி விடுவிக்கப்படவில்லை. நாட்டின் கல்வித்துறையில் மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் முதன்மையான திட்டம் இது என்பதால், உரிய நேரத்தில் நிதியை விடுவிப்பது அவசியம்.
நடப்பாண்டு தமிழகத்திற்கு, 3,586 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், மத்திய அரசின் பங்கு 60 சதவீதம், அதாவது 2,152 கோடி ரூபாய். இந்நிதியை பெறுவதற்கான முன்மொழிவுகள், ஏப்ரலில் சமர்ப்பிக்கப்பட்டன. எனினும் முதல் தவணையான, 573 கோடி ரூபாய் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர முந்தைய ஆண்டுக்கான, 249 கோடி ரூபாயையும், மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. தமிழக எம்.பி.,க்கள் கடந்த மாதம் மத்திய அமைச்சரை சந்தித்து, உரிய நேரத்தில் மானியங்களை விடுவிக்கும்படி, கோரிக்கை விடுத்தனர். ஆனாலும், இதுவரை மாநில அரசுக்கு மானியம் விடுவிக்கப்படவில்லை.
சமீபத்தில், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளில், தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்தினால் தான், தற்போதைய சமக்ரா சிக் ஷா திட்டத்தின் கீழ், நிதியை அனுமதிக்க முடியும் என்பதை, நிபந்தனையாக இணைக்க மத்திய அரசு முயற்சித்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை - 2020ல் குறிப்பிட்ட சில விதிகள் ஏற்புடையதாக இல்லை. பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை இன்னும் ஏற்கப்படவில்லை.
பிராந்திய அடிப்படையில், சமூக, பொருளாதார நிலைமைகள், உள்கட்டமைப்பு வசதிகள், நிதி ஆதாரங்கள் போன்றவற்றில் வேறுபாடு உள்ளது. இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வி தொடர்பான விஷயங்களில், மாணவர்களை பாதிக்கும் கொள்கைகளை அமல்படுத்தும் போது, அதில் ஒவ்வொரு மாநிலத்தின் நியாயமான கருத்தும் உள்ளடங்கி இருக்க வேண்டும்.
சமக்ரா சிக் ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைப்பது, லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி மற்றும் ஆசிரியர்களை பாதிக்கும்.
எனவே, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் நேரடியாக தலையிட வேண்டும். விவாதங்கள் தேவைப்படும் கொள்கையை, கல்விக்கான நிதி வழங்கும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.