ADDED : ஏப் 06, 2024 01:23 AM
சென்னை:'தேர்தல் நாளன்று வாக்காளர்கள் ஓட்டளிக்க வசதியாக, தேர்தல் கமிஷன் அரசோடு இணைந்து, நகர்ப்புறங்களில் பஸ்களை இலவசமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் சராசரியாக 70 முதல் 74 சதவீத ஓட்டுகள் தான் பதிவாகின்றன. தேர்தல் கமிஷன், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளது.
இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்தாலும், நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் வாக்காளர்கள் தங்கள் பணி, குழந்தைகள் கல்வி உட்பட பல்வேறு காரணங்களுக்காக, ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு இடம் மாறுகின்றனர். அப்படி மாறுவோர், ஓட்டுரிமையை அந்த பகுதிக்கு மாற்றாமல் விட்டு விடுகின்றனர்.
அவர்கள் ஓட்டுப்பதிவு அன்று, ஏற்கனவே ஓட்டு உள்ள பகுதிக்கு சென்று ஓட்டளிக்க முன்வருவதில்லை. இது, ஓட்டுப்பதிவு குறைய முக்கிய காரணம்.
எனவே, ஓட்டுப்பதிவு அன்று மட்டும், பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு, நகரப் பேருந்துகளில் இலவசமாக செல்ல அனுமதிக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால், மக்கள் தாங்கள் வசித்த பகுதிக்கு சென்று ஓட்டளிக்க முன்வருவர் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

