UPDATED : மே 22, 2024 01:47 PM
ADDED : மே 22, 2024 07:04 AM

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளான நேற்று காங்., எம்.பி., ராகுலை பாராட்டி முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ 'எக்ஸ்' தளத்தில் கருத்து வெளியிட்டது அ.தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இந்த வீடியோவை அவர் நீக்கிவிட்டார்.
நேற்று தனது 'எக்ஸ்' தளத்தில் ராகுல் குறித்த வீடியோக்களை வெளியிட்ட செல்லுார் ராஜூ, ''நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்,'' என பாராட்டு தெரிவித்தார். சம்பந்தமே இல்லாமல் அதுவும் ராஜிவ் நினைவு நாளன்று பாராட்ட வேண்டிய அவசியம் என்ன என அ.தி.மு.க., நிர்வாகிகள் இடையே 'பட்டிமன்றமே' நடந்தது. செல்லுார் ராஜூ மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பினர் பொது செயலாளர் பழனிசாமியை வலியுறுத்தினர்.
அவர்கள் கூறுகையில், ''அரசியலில் தன் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள ஏதாவது 'கொளுத்தி' போடுவதே செல்லுார் ராஜூவுக்கு வேலையாக உள்ளது. ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி செய்திருக்க முடியுமா. இந்நேரம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார். ஜெயலலிதா இருந்த இடத்தில் இருக்கும் பழனிசாமி, கொஞ்சம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால்தான் கட்சி வளர்ச்சி அடையும். 2026 சட்டசபை தேர்தலிலும் வெல்ல முடியும்,'' என்றனர்.
நமது நிருபரிடம் செல்லுார் ராஜூ கூறுகையில், ''பழனிசாமி போல் ராகுல் எளிமையாக இருப்பதை சுட்டிக்காட்டி 'இளம் தலைவர்' என பாராட்டினேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தி.மு.க.,வில் கவுன்சிலர்கூட பந்தாவாக வரும் நிலையில் அக்கட்சி கூட்டணி வைத்துள்ள காங்கிரசின் ராகுல் எளிமையாக இருக்கிறார் என்பதை தெரிவிக்கவே 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டேன். இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் பாராட்ட தவறியதில்லை. யாராக இருந்தாலும் பாராட்டுவேன். பிரதமர் மோடி தனது தாயார் இறுதிசடங்கை எளிமையாக நடத்தியதைகூட பாராட்டினேன்,'' என்றார்.
இந்நிலையில், அதிமுக.,வில் இந்த வீடியோ பதிவிற்கு சர்ச்சை எழுந்த நிலையில், செல்லூர் ராஜூ இன்று அதனை நீக்கிவிட்டார்.

