ADDED : மே 11, 2024 01:38 AM
சென்னை:'தொழில் அதிபர் அம்பானி, அதானி மீது பிரதமர் மோடி வைத்துள்ள குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும்' என, ராகுல் கோரிக்கை விடுத்திருப்பது முற்றிலும் நியாயமானது' என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
லோக்சபா தேர்தலில், தொழிலதிபர்கள் அம்பானி, அதானி போன்றவர்கள், பிரதமர் மோடிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டி பிரசாரம் செய்தார்.
பதிலடி கொடுத்தார்
சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இதற்கு பதிலடி கொடுத்தார்.
'தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, அம்பானி, அதானி பெயரை உச்சரிப்பதை ராகுல் நிறுத்தி விட்டார். இந்த தேர்தலில் எவ்வளவு பணம், அவர்களிடம் இருந்து தனக்கு கிடைத்துள்ளது என்பதை ராகுல் அறிவிக்க வேண்டும்.
'லாரி நிறைய பணம் காங்கிரசுக்கு வந்து சேர்ந்து விட்டதா; ஒரே இரவில் இவர்களுக்குள் என்ன ஒப்பந்தம் நடந்தது; இருவரையும் விமர்சிப்பதை ராகுல் ஏன் நிறுத்தினார்' என்று, மோடி கேள்விகள் எழுப்பினார்.
மோடியின் இந்த கேள்விகளுக்கு ராகுல் பதிலளித்து பேசுகையில், 'பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ., - அமலாக்கத் துறையை அனுப்பி வையுங்கள். வேகமாக விசாரணை நடத்தி முடியுங்கள்' என்றார்.
இந்நிலையில், ராகுலுக்கு ஆதரவாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அம்பானி, அதானி மீது பிரதமர் மோடி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இரண்டு முக்கிய தொழிலதிபர்களிடமும், லாரி நிரப்பும் அளவு பணம் இருப்பதாகவும், அவை காங்கிரசுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
நியாயமானது
பிரதமர் மோடியிடமிருந்து வரும் இந்த குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாக விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ., அல்லது அமலாக்கத்துறை வாயிலாக விசாரணை நடத்த வேண்டும் என, ராகுல் வலியுறுத்தியுள்ளார். விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் நியாயமானது.
கடந்த 24 மணி நேரத்தில், பிரதமர் ஏன் அமைதியாக இருந்தார். விசாரணைக்கான கோரிக்கைக்கு, மத்திய நிதி அமைச்சர் ஏன் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார்; அவர்களின் மவுனம் அபத்தமானது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.