ADDED : ஜூன் 18, 2024 06:08 AM

சென்னை: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கேரள கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 22, 23ம் தேதிகளிலும் நீடிக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், இப்பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களில், இயல்பை விட 3 டிகிரி அதிகமாக வெப்பநிலை பதிவாகவும் வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை, 38 டிகிரி செல்ஷியசை ஒட்டியே இருக்கும்.
தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்றும், நாளையும், மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும்; இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசலாம். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.