தமிழக திட்டங்களுக்கு வெறும் 1,000 ரூபாய் ராமதாஸ் கண்டனம்
தமிழக திட்டங்களுக்கு வெறும் 1,000 ரூபாய் ராமதாஸ் கண்டனம்
ADDED : ஆக 15, 2024 07:47 PM
சென்னை:'தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, மத்திய அரசு குறைத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக ரயில் திட்டங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டில், 875 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட பட்ஜெட்டில், 246 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. திண்டிவனம் -- நகரி புதிய ரயில் பாதை திட்டத்திற்கான நிதி, 350 கோடி ரூபாயில் இருந்து, 153 கோடி ரூபாயாகவும்; தர்மபுரி - - மொரப்பூர் திட்டத்திற்கான நிதி, 115 கோடி ரூபாயில் இருந்து, 49 கோடி ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் -- திருவண்ணாமலை புதிய பாதை திட்டத்திற்கான, 100 கோடி ரூபாய்; சென்னை -- புதுச்சேரி -- கடலுார் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்திற்கான, 25 கோடி ரூபாய்; மூன்று இரட்டை பாதை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தலா, 150 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு வெறும், 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு மாநிலத்திற்கான ரயில்வே திட்டங்களை புறக்கணித்துவிட்டு, நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியாது. ஒருபுறம் மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை குறைக்கிறது. மறுபுறம், ரயில் திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தி தராமல், தமிழக அரசு தாமதம் செய்கிறது. மத்திய, மாநில அரசுகள் ஒன்றை ஒன்று குறை கூறுவதை கைவிட்டு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அது தான் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் நல்லது.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

