பி.எஸ்.ஓ., மிஷினில் தராசு இணைப்பு திட்டத்தைகைவிட ரேஷன் பணியாளர்கள் வலியுறுத்தல்
பி.எஸ்.ஓ., மிஷினில் தராசு இணைப்பு திட்டத்தைகைவிட ரேஷன் பணியாளர்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 15, 2025 02:32 AM
ராமநாதபுரம்:பி.எஸ்.ஓ., மிஷினுடன் தராசு இணைப்பு திட்டத்தால் கார்டு பதிவு செய்து பொருட்கள் வழங்க மிகவும் காலதாமதமாவதால் இதனை கைவிட வேண்டும். பொட்டலம் முறையில் பொருட்களை வழங்க வேண்டும் என ரேஷன் பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழக ரேஷன் கடைகளில் பி.எஸ்.ஓ., மிஷினில் கைரேகை பதிவு செய்து அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இவை சரியான எடையில் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் பி.எஸ்.ஓ., மிஷினில் தராசு இணைக்கும் திட்டத்தில் சோதனை அடிப்படையில் மாவட்டங்களில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இம்முறையால் ஒரு ரேஷன் கார்டுக்கு கூட பொருட்கள் வழங்க கால விரயம் ஏற்படுகிறது என
ரேஷன் பணியாளர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
தற்போது பி.எஸ்.ஓ., மிஷினுடன் தராசு இணைப்பு திட்டத்தால் பொது மக்களுக்கு சரியான எடையில் பொருட்களை விநியோகம் செய்யக் கூறுகின்றனர். இதில் அரிசி, பருப்பு, சர்க்கரை என ஒவ்வொரு பொருட்களுக்கும் கார்டுதாரர்களிடம் கைரேகை பதிவு செய்ய வேண்டும். இதனால் கார்டுக்கு 20 நிமிடங்கள் ஆகிறது.
மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்படுகின்றனர். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவதே சிரமம். எனவே பி.எஸ்.ஓ., மிஷினில் தராசு இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மேலும் நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து கடைகளுக்கு வரும் போது அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகியவற்றில் மூடைக்கு 2 முதல் 5 கிலோ வரை குறைவாக உள்ளது.
அந்த மூடைகளில் சரியான எடை அளவை உறுதி செய்ய வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வுகாண அனைத்துப் பொருட்களையும் பொட்டலமாக வழங்க வேண்டும் என்றனர்.-----