எம்.பி.,க்கு எதிரான வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்ற மறுப்பு
எம்.பி.,க்கு எதிரான வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்ற மறுப்பு
ADDED : ஏப் 11, 2024 09:04 PM
சென்னை:கடலுார் தொகுதி தி.மு.க., - எம்.பி.,க்கு எதிரான கொலை வழக்கு விசாரணையை, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடலுார் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக ரமேஷ் உள்ளார். இவரது முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில், பண்ருட்டி அருகேயுள்ள மேல்மாம்பட்டைச் சேர்ந்த கோவிந்தராசு என்பவர் பணியாற்றினார். கடந்த 2021ல் கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்தார். சம்பவம் தொடர்பாக, ரமேஷ் எம்.பி., உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக, சி.பி.சி.ஐ.டி., வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை கடலுார் நீதிமன்றத்தில் நடந்தது. சாட்சிகள் மிரட்டப்படுவதாகவும், முறையாக விசாரணை நடக்கவில்லை என்றும், கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை, செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், 'அரசு வழக்கறிஞர், வழக்கை முறையாக நடத்தவில்லை; சாட்சி விசாரணைக்கு, எனக்கு மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது; மற்றவர்களுக்கு அனுப்பப்படவில்லை. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு விசாரணையை மாற்ற வேண்டும்' என்று செந்தில்வேல் மனு தாக்கல் செய்தார்.
மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. வேறு நீதிமன்றத்துக்கு விசாரணையை மாற்றக்கோரிய மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்தார். அரசு வழக்கறிஞரை மாற்றுவது குறித்து, சி.பி.சி.ஐ.டி.,யிடம் முறையிடலாம் என்றும் அறிவுறுத்தினார்.

