ADDED : ஏப் 28, 2024 02:04 AM

அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கிய அழகர் நேற்று காலை அழகர்கோவிலுக்கு திரும்பினார். அவரை பக்தர்கள் பூ மழை பொழிந்தும், திருஷ்டி பூசணிக்காய் சுற்றியும் வரவேற்றனர்.
மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர்கோவில் சுந்தர ராஜபெருமாள் கள்ளழகர் கோலத்தில் ஏப்., 21 அழகர் மலையிலிருந்து புறப்பட்டார். அவருக்கு ஏப்., 22 மூன்று மாவடியில் எதிர்சேவை நடந்தது. கடந்த 23ல் வைகை ஆற்றில் தங்கக்குதிரையில் இறங்கினார். மறுநாள் மண்டூக முனிவருக்கு வண்டியூர் தேனுார் மண்டபத்தில் சாப விமோசனம் வழங்கினார். அன்று இரவு ராமராயர் மண்டகப்படியில் தசாவதார நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 25 காலை மோகினி அவதாரத்துடன் புறப்பட்ட அழகர் தல்லாகுளம் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு அன்று இரவு சென்றார். நேற்று முன்தினம் அதிகாலை பூப்பல்லக்கில் அழகர்கோவிலுக்கு புறப்பட்டார்.
நேற்று காலை 11:00 மணிக்கு தங்க பல்லக்கில் இருப்பிடம் சேர்ந்த அழகருக்கு கோவில் வண்டிபாதை நுழைவாயிலில் 'கோவிந்தா கோவிந்தா' கோஷம் முழங்க, 2 டன் பூக்களை மழையாய் துாவி பக்தர்கள் வரவேற்றனர். 21 பெண்கள் பூசணிக்காய் வைத்து ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தனர். இன்று உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

