வறுத்தெடுக்குது வெயில்; கட்டுமான பணி நேரம் மாற்றம்
வறுத்தெடுக்குது வெயில்; கட்டுமான பணி நேரம் மாற்றம்
ADDED : ஏப் 30, 2024 04:07 AM
சென்னை : தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நண்பகல் நேரத்தை தவிர்க்கும் வகையில், கட்டுமான பணிக்கான நேரத்தை மாற்றி அமைத்து, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், நண்பகல் நேரத்தில் வெப்ப அலை வீசுவதால், திறந்தவெளியில் செல்ல வேண்டாம் என, வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், திறந்தவெளியில் பணிபுரிவோர் வெப்ப அலையால் பாதிக்கப்படாமல் இருக்க, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க அரசும் அறிவுறுத்தி உள்ளது. கட்டுமான நிறுவனங்களுக்கு, தொழிலாளர் நலத்துறை இதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.
இதையடுத்து, வெளிப்புற சூழலில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கான நேரத்தை மாற்றி அமைக்க, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து உள்ளன.
இதுகுறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
வெப்ப அலையால் கட்டுமான பணியாளர்கள் நேரடியாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதை கருத்தில் வைத்து, வெளிப்புற கட்டுமான பணிகள், காலை, 6:00 மணிக்கு துவங்கி, 11:00 மணிக்கு முடிக்கப்படுகின்றன. அடுத்த வேளையாக, பிற்பகல், 3:00 மணி முதல், 5:00 மணி வரை கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கட்டுமான திட்ட பகுதியிலேயே தங்கியிருக்கும் பணியாளர்களுக்கு, இந்த நேர மாற்றம் பேருதவியாக உள்ளது. குறிப்பாக, ஊரக பகுதிகளில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சில கட்டுமான நிறுவனங்கள், ஷிப்ட் முறையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நடைமுறைக்கு மாறியுள்ளன. இதனால், கோடை வெயிலால் கட்டுமான பணிகளில் தேக்கம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

