கொடைக்கானலில் ஏப்.18 முதல் 21 வரை அறைகள் ஹவுஸ்புல்
கொடைக்கானலில் ஏப்.18 முதல் 21 வரை அறைகள் ஹவுஸ்புல்
ADDED : ஏப் 16, 2024 04:10 AM
திண்டுக்கல் : ஓட்டுப்பதிவிற்காக பொது விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஏப். 18 முதல் ஏப்.21 வரை கொடைக்கானலில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் ஹவுஸ்புல் ஆகியுள்ளது.
கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-வது வாரத்தில் கோடைமழை பெய்யும். சித்திரையும், குளு, குளு சீசனும் ஒன்றாக தொடங்கும். தற்போது சீசன் தொடங்கி உள்ளது. சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருகின்றனர்.
பொதுவாக வார விடுமுறை நாட்கள், கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். இரு தினங்களுக்கு முன்பு கூட கொடைக்கானல் பெருமாள் மலையை தாண்டி 10 கி.மீ., துாரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
லோக்சபா தேர்தலுக்காக ஏப். 19 பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள். தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் கொடைக்கானலுக்கு வர ஏராளமானோர் அறைகளை முன்பதிவு செய்துள்ளனர்.
அனைத்து ஓட்டல்களின் அறைகளும் ஏப்.18 முதல் ஏப் 21 வரை 'புக்' செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓட்டுப்பதிவை விட சுற்றுலாவிற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பது தெரிகிறது. 100 சதவீத ஓட்டுப்பதிவு இலக்கு பாதிக்கப்படும் நிலை உள்ளது.

