மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க தனியாருக்கு ரூ.1.10 கோடி மானியம்
மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க தனியாருக்கு ரூ.1.10 கோடி மானியம்
ADDED : பிப் 27, 2025 11:34 PM
சென்னை:புதிதாக தனியார் மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க, 1.10 கோடி ரூபாய் மானியம் வழங்க, தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
திருவள்ளூர், அரியலுார் உட்பட 19 மாவட்டங்களை சேர்ந்த, 20 - 25 நபர்கள் பயன் பெறலாம். உள்நாட்டு மீன் வளர்ப்போருக்காக, 2024 - 25ல் அறிமுகமான இத்திட்டத்தில், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து, நிதி ஒதுக்கியுள்ளன.
சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகள், இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். நபர் ஒன்றுக்கு, 2.45 ஏக்கர் வைத்திருக்க வேண்டும். மாவட்ட மீன் வளர்ப்போர் முகமையில் பதிவு செய்திருக்க வேண்டும். அதில், தகுதியானவர்களை கண்டறிந்து, அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொள்வர்.
குறிப்பிட்ட அளவு ஆழத்தில், குளம் அமைக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வு செய்த பின், அவர்களுக்கான மானியத் தொகையை விடுவிப்பர். அதை வைத்து, உள்ளீட்டு கட்டமைப்புகள் மற்றும் மீன் குஞ்சுகள் வாங்கலாம். ஒரு பருவம் முடிவதற்கு எட்டு மாதங்கள் ஆகும்.
ஒரு குளம் அமைக்க, 11 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதற்கு மேல் செலவு செய்தால், மானியம் வழங்க இயலாது. செலவு செய்த தொகை அடிப்படையில், பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதம், பெண்களுக்கு 60 சதவீதம், பட்டியல் பிரிவினருக்கு 60 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
இதன் வாயிலாக ஒரு நபர், 4 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாய் வரை மானியம் பெற்று பயன் பெற முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.