ADDED : மார் 26, 2024 11:07 PM
சென்னை,:சில தினங்களுக்கு முன், மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், மதுரை, புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். இந்த மாவட்டங்களில் வீட்டில் பதுக்கி வைத்திருந்து, பின், இரு சக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட பழமையான ஆறு சிலைகளை மீட்டனர்; 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், இவர்களுக்கு பின்னணியில் மிகப்பெரிய கும்பல் செயல்படுவது தெரியவந்துள்ளது. கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை ஆறு மாதம் வெளியே எடுக்க மாட்டார்கள். வீடு, தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பதுக்கி வைத்து விடுவர். ஆறு மாதத்திற்குள் விலை பேசி விற்று விடுவர். இதற்கு பல நிலைகளில் ஏஜன்ட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
கைதானவர்கள் அளித்த தகவலின்படி, சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம், ஐந்துக்கும் மேற்பட்ட பழங்கால உலோகச் சிலைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
சிலைகளுடன் தலைமறைவாக உள்ள அவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் கூறுகையில், 'சிலை கடத்தல் கும்பல் குறித்து துப்பு துலக்கி உள்ளோம். விரைவில் சிக்குவர்' என்றனர்.

