ADDED : ஆக 28, 2024 11:38 PM
சென்னை:துறைமுக ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து, இந்திய துறைமுகங்களின் நிர்வாகக் குழுவினருடன், தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சில், உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்றன.
மும்பை, சென்னை, துாத்துக்குடி, கோல்கட்டா, கோவா உட்பட 12 துறைமுகங்களில், பல்வேறு நிலைகளில், 18,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் உயர்வு வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி, 2022 ஜனவரியில், புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். ஆனால், 31 மாதங்களாகியும், புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
டில்லியில் நேற்று, இந்திய துறைமுகங்களின் நிர்வாகக் குழுவினருடன், ஐந்து தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சு நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. புதிய சம்பள ஒப்பந்தத்தின்படி, 8.5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என, உறுதி அளிக்கப்பட்டது. அதை ஏற்று தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றன.
இதுகுறித்து, இந்திய நீர் வழி போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலர் நரேந்திர ராவ் கூறியதாவது:
துறைமுக ஊழியர்களுக்கு, 8.5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. இதனால், துறைமுக கடைநிலை ஊழியர்களுக்கு, 5,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 15,000 ரூபாய் வரை சம்பள உயர்வு கிடைக்கும்.
மற்ற கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளனர். இதனால், வேலைநிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.