ADDED : செப் 08, 2024 02:21 AM

சென்னை:பண மோசடி செய்த வழக்கில், சசிகலாவின் உறவினரை மணிப்பூர் போலீசார் கைது செய்தனர்.
சசிகலாவின் உறவினர் இளவரசியின் சம்பந்தியான பாஸ்கர் என்ற கட்டை பாஸ்கர், 58. இவர், புழலில் ஜெ.கிளப் என்ற பெயரில் மனமகிழ் மன்றம் ஒன்றை நடத்தி வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன், மணிப்பூர் மாநிலத்தில் தொழில் செய்த போது, 'கட்டை' பாஸ்கர், 2.28 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, மணிப்பூர் இம்பால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற அனுமதி பெற்று, சென்னை, புழல் கிளப்பில் இருந்த பாஸ்கரை நேற்று கைது செய்தனர்.
கைது செய்ய வந்த போலீசார் சீருடை அணியாமல் இருந்ததால், பாஸ்கரின் மேலாளர் சந்தேகமடைந்து, புழல் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
புழல் போலீசாரின் விசாரணையில், 'வந்தது மணிப்பூர் போலீஸ் என்பதும், நீதிமன்ற உத்தரவுடன் கைது செய்ய வந்துள்ளதும்' உறுதியானது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பாஸ்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மணிப்பூர் போலீசார், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
செம்மர கடத்தல் வழக்குகளில் மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் ஆந்திர போலீசாரால், ஏற்கனவே, 'கட்டை' பாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர்.