மாத்திரைகளை பிரித்து தனித்தனி கவரில் வழங்க அரசு மருத்துவமனைகளுக்கு செயலர் உத்தரவு
மாத்திரைகளை பிரித்து தனித்தனி கவரில் வழங்க அரசு மருத்துவமனைகளுக்கு செயலர் உத்தரவு
ADDED : ஜூன் 02, 2024 01:10 AM

சென்னை:''தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், மாத்திரைகளை சாப்பிட வேண்டிய நேரத்தை குறிப்பிட்டு, தனித்தனி கவர்களில் வழங்க வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகளில், நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர்கள், காலை, மதியம், இரவில் சாப்பிட வேண்டிய மருந்து, மாத்திரைகளை சீட்டில் எழுதி கொடுக்கின்றனர்.
அந்த மருந்து சீட்டுடன், மருந்து வாங்கும் இடத்தில் அனைத்து மாத்திரைகளையும், ஒரே கவரில் போட்டு கொடுக்கின்றனர். அல்லது மொத்தமாக மாத்திரைகளை கையில் கொடுக்கின்றனர். எந்த மாத்திரையை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று தெரியாமல், மூன்று வேளையும், அனைத்து மாத்திரைகளையும் சாப்பிடும் நிலை உள்ளது.
இவ்வாறு சாப்பிடுவதால், நோயாளிகளுக்கு உடல்நிலை விரைந்து குணமடைவதில் சிக்கல் ஏற்படுவதுடன், வயிற்று பிரச்னை போன்ற பக்க விளைவுகளும் உருவாகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் பகுதியை சேர்ந்த ராஜன், முதல்வர் தனிப்பிரிவில் அளித்த புகாரில், 'மொத்தமாக மாத்திரை கொடுப்பதால், நோயாளிகள் முறையாக சாப்பிட முடியாத நிலை உள்ளது.
நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை, சாப்பிடும் நேரத்தை குறிப்பிட்டு, தனித்தனி கவரில் வழங்க வேண்டும்' என்று, கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அளித்த பதிலில், 'அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மாத்திரைகளை, தனித்தனி கவரில் நோயாளிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றை பின்பற்றி, சில இடங்களில் தனித்தனி கவரில் மாத்திரைகள் வழங்கப்பட்டாலும், பெரும்பாலான மருத்துவமனைகளில் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில், மருந்து, மாத்திரைகளை தனித்தனி கவர்களில் வழங்க, அனைத்து மருத்துவமனை முதல்வர்கள், இயக்குனர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், நோயாளிகளுக்கு மருந்து உட்கொள்வதில் எவ்வித சிரமமும் இல்லாமல், காலை, மதியம், இரவு, சாப்பிடுவதற்கு முன் என்பதை குறிப்பிட்டு, தனித்தனி கவர்களில் மருந்தாளுனர்கள் வழங்க வேண்டும்.
இந்த கவர்களை அச்சிடுவதற்கு, மருத்துவமனையின் வைப்பு நிதியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
அதைப் பின்பற்றி, தஞ்சாவூர், திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், தர்மபுரி, சிவகங்கை, சென்னை ராஜிவ் காந்தி, ஓமந்துாரார் பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தனித்தனி கவர்களில் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், இம்முறையை பின்பற்றவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
போதிய மருந்தாளுனர்கள் இல்லை
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், தினமும் 15,000 பேர் வரை சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு, துறை வாரியாக பல இடங்களில் மருந்தகங்கள் உள்ளன. அதேநேரம், மற்ற அரசு மருத்துவமனைகளில், ஓரிரு மருந்தகங்கள் மட்டுமே உள்ளன. அனைத்து மருந்தகங்களிலும், நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருப்பர்.
ஒவ்வொருவருக்கும் மருந்துகளை, தனித்தனி கவர்களில் போட்டு கொடுக்க முடியாது. ஏற்கனவே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தாளுனர்கள் பற்றாக்குறை உள்ளது. பணியில் இருப்போர் கூடுதல் நேரம் பணியாற்றி வருகிறோம். அதனால், ஒவ்வொரு நோயாளிக்கும் நேரம் ஒதுக்கி, தனித்தனி கவர்களில் மாத்திரைகளை போட்டு தரும் அளவுக்கு, போதிய அளவு நேரம் இல்லை. அனைத்து நோயாளிகளுக்கும் முறையாக மருந்துகளை பிரித்து தர வேண்டும் என்றால், துறை வாரியாக மருந்தகங்கள் ஏற்படுத்துவதுடன், போதிய அளவில் மருந்தாளுனர்கள் நியமித்தால் மட்டுமே, 100 சதவீதம் சாத்தியமாகும்.
- மருந்தாளுனர்கள்

