ஓட்டு குறைந்தால் கட்சி கலைப்பு பா.ஜ.,வுக்கு சீமான் சவால்
ஓட்டு குறைந்தால் கட்சி கலைப்பு பா.ஜ.,வுக்கு சீமான் சவால்
ADDED : மே 25, 2024 02:45 AM
சென்னை:“பா.ஜ.,வை விட குறைந்த ஓட்டுகள் பெற்றால், கட்சியை கலைத்து விடுவேன்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் அவர் கூறியதாவது: நான் மனித பிறவியல்ல; கடவுளால் அனுப்பட்ட துாதர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகாலம் எப்படிபட்டவர் ஆட்சியில் வாழ்ந்திருக்கிறோம் என்பதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.
ராமர், ராமர் என்று சொல்லிப் பார்த்தார்; எடுபடவில்லை; இப்போது நான் தான் ராமர் என்று கூறுகிறார். ராமருக்கு அவர் கோவில் கட்டவில்லை; தனக்கு வீடு கட்டி கொண்டுள்ளார். இது கால கொடுமை. முல்லைப்பெரியாறு அணையை இடிக்கப்போவதாக கேரளா அரசு சொல்கிறது. அணை உறுதித்தன்மையுடன் இருப்பதாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. வீம்புக்காக, இப்படி செய்கின்றனர். வேண்டுமானால், அணைக்குள், இன்னொரு அணையை கட்டி கொள்ளலாம்.
தி.மு.க., கூட்டணி கட்சிகளான கம்யூ.,- காங்கிரஸ் கட்சிகள் தான் கேரளா, கர்நாடகாவை ஆள்கின்றன. இங்குள்ள அக்கட்சி தலைவர்கள், அரசியலுக்காக, தமிழக நீர் ஆதார பிரச்னைகள் குறித்து பேசாமல், மவுனம் காக்கின்றனர்.
திருவள்ளுவருக்கு, ஒருதரப்பு காவி உடை போடுகின்றனர்; மற்றொரு தரப்பு கருப்பு உடை போடுகின்றனர். நாங்கள் ரெண்டையும் கிழித்து போடுவோம். அதிகாரத்தில் இருப்பதால், இரு தரப்பும் சேட்டை செய்கின்றனர். லோக்சபா தேர்தல் முடிவிற்கு பின் தென் மாவட்டங்களில், பா.ஜ., மூன்றாவது பெரிய கட்சியா உருவெடுக்கும் என, அண்ணாமலை கூறியுள்ளார்.
தேர்தல் முடிவில் நாம் தமிழர் கட்சியை விட அதிக ஓட்டுகள் பெற்றுவிட்டால், நான் கட்சியை கலைத்து விடுகிறேன். தனித்து நின்று ஆண் மகனாக போட்டியிட வேண்டும். கூட்டணி கணக்கு சேர்த்து ஓட்டு எண்ணிக்கையை பா.ஜ.,வினர் கூறக்கூடாது.
இவ்வாறு சீமான் கூறினார்.

