ADDED : ஜூலை 09, 2024 04:00 AM
சென்னை: தமிழகம் முழுதும் பசுமை பரப்பை அதிகரிக்க, பசுமை தமிழகம் இயக்கம் வாயிலாக, வளம் குன்றிய வனப்பகுதிகள், தனியார் நிலங்கள், விவசாய நிலங்களை ஒட்டிய பகுதிகள், அரசு துறை நிலங்கள் என பல்வேறு இடங்களில், மரங்கள் நடப்பட்டு வருகின்றன.
குறிப்பிட்ட சில பகுதிகளில், சந்தன மரங்கள், செம்மரங்கள் வளர்ப்பிலும் வனத்துறை ஈடுபட்டு வருகிறது.
விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட காரணங்களுக்காக, செம்மரங்கள் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சந்தன மரங்கள் போன்று செம்மரங்களுக்கு சர்வதேச அளவில் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. இதை முறையாக வளர்த்து விற்பனை செய்வதை ஊக்குவித்தால், இது தொடர்பான கடத்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கலாம்.
தமிழகத்தில், திருச்சி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுார் ஆகிய மாவட்டங்களில், செம்மரங்கள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு, 1,482 ஏக்கரில், 1.20 லட்சம் செம்மர கன்றுகள், விவசாயிகள் வாயிலாக வளர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இத்திட்டத்துக்காக தமிழக அரசு, 1.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

