ரயில்வே போலீசில் பற்றாக்குறை பாதுகாப்பு பணியில் தொய்வு
ரயில்வே போலீசில் பற்றாக்குறை பாதுகாப்பு பணியில் தொய்வு
ADDED : செப் 14, 2024 07:07 PM
சென்னை:ரயில்வே போலீசில், 30 சதவீத பணியிடங்கள் காலியாக இருப்பதால், பயணியருக்கான பாதுகாப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே, சென்னையை தலைமையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் ஒரு சில பகுதிகள் என, 5,087 கி.மீ., துாரத்திற்கு ரயில்களை இயக்கி வருகிறது. 300 விரைவு ரயில்கள் உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்களின் சேவையில், 21.50 லட்சம் பேர் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் மொபைல் போன், நகை, பணம் திருட்டு சம்பவங்களும், டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டிகளில் ஏறுவோரால் சண்டைகளும் நடந்து வருகின்றன.
ஆனால், ரயில் நிலையங்களில் போதிய அளவில் போலீசார் இல்லாததால், பயணியர் பாதுகாப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெண் பயணியர் சிலர் கூறியதாவது:
விரைவு, மின்சார ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் பயணம் செய்து வருகின்றனர். ஆனால், பெண்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடக்கிறது. ஏதாவது சம்பவம் நடந்தால் மட்டுமே, ரயில்களில் போலீசார் நியமிக்கப்பட்டு, தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு ரோந்து பணிகள் நடக்கின்றன.
அதன்பின், ரயில்களில் போலீசாரை பார்க்க முடியவில்லை. மேலும், உடைமைகளை பறிகொடுத்த பயணியர் புகார் அளிக்க சென்றால் கூட, பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், போதிய போலீசாரை ரயில்வே நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரயில்வே போலீசார் கூறியதாவது:
ரயில் பயணியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், ரயில்வே போலீசில் ஆட்களை அதிகரிக்கவில்லை. மாறாக, 30 சதவீதம் வரை ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், ஒரு நடைமேடைக்கு கூட ஒரு போலீசை நிறுத்த முடியவில்லை.
பெரும்பாலான ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணிக்கு, இரண்டு போலீசாரை கூட நியமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. போதிய அளவில் போலீஸ்காரர்களை நியமிக்க வேண்டும் என, தமிழக காவல் துறையிடம் வலியுறுத்தி வருகிறோம்.
அனைத்து ரயில் நிலையங்களிலும், 'சிசிடிவி' கேமரா வசதி இல்லாததால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.