ADDED : ஏப் 02, 2024 10:21 PM
சென்னை:தமிழக மின் வாரியம், கேபிள், மின் கம்பம், பில்லர் பாக்ஸ், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட சாதனங்கள் வாயிலாக மின் வினியோகம் செய்கிறது.
டிரான்ஸ்பார்மர் தான், மின் வழித்தடங்களில் இருந்து, அதிக திறனில் வரும் மின்சாரத்தின் அளவை குறைத்து, சீராக வினியோகம் செய்ய உதவுகிறது. டிரான்ஸ்பார்மரில் பழுது, 'பியூஸ்' போவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அதைச் சரிசெய்ய ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரில் ஏறும் முன், அதில், மின் வினியோகத்தை நிறுத்துவதற்காக, 'சுவிட்ச் ஆப்' செய்வர். அப்படி இருந்தும் சில சமயங்களில், மின் கசிவு ஏற்படுகிறது. இதே பிரச்னை மின் கம்பங்களிலும் ஏற்படுகிறது.
இந்த விபரம் தெரியாமல் பழுதை சரிசெய்ய டிரான்ஸ்பார்மர், கம்பங்களின் மேல் ஏறும்போது மின் கசிவால், மின் விபத்தில் சிக்கி ஊழியர்கள் உயிரிழக்கின்றனர். இதற்கு தீர்வு காண, கையடக்க வடிவில் நவீன ஒலி எழுப்பும் கருவியை, மின் வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
அந்த கருவியை டிரான்ஸ்பார்மரில் பழுதை சரிசெய்ய அருகில் எடுத்து சென்றதும், எச்சரிக்கை செய்யும் ஒலியை எழுப்பும். இதன் வாயிலாக, மின் வினியோகத்தை முற்றிலுமாக நிறுத்தி, பழுதை சரிசெய்யலாம். இதனால், மின் விபத்து தடுக்கப்படும்.

