பாஸ்போர்ட் தருவதாகக் கூறும் போலி இணையதளங்களை தொடாதீர்கள் உஷார்படுத்துகிறது வெளியுறவுத்துறை
பாஸ்போர்ட் தருவதாகக் கூறும் போலி இணையதளங்களை தொடாதீர்கள் உஷார்படுத்துகிறது வெளியுறவுத்துறை
ADDED : ஆக 28, 2024 11:26 PM
சென்னை:'போலி பாஸ்போர்ட் இணையதளங்கள் மோசடி யில் ஈடுபடுவதால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என, வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்து உள்ளது.
பாஸ்போர்ட் அலுவலகங்கள், வெளியுறவுத் துறையின் கீழ் இயங்குகின்றன. பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது, புதுப்பிப்பது உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் இணைய வழியில் நடக்கின்றன.
இதை சாதகமாக்கி, உளவு மற்றும் மோசடி நிறுவனங்கள், போலியான இணையதளங்களை உருவாக்கி, மோசடியில் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்த புகார்களின் அடிப்படையில், வெளியுறவுத்துறை அமைச்சகம், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை:
பாஸ்போர்ட் விண்ணப் பதாரர்களை கவரும் வகையில், பல்வேறு இணையதளங்கள் மற்றும் மொபைல் போன் செயலிகளை, மோசடிக்காரர்கள் உருவாக்கி உள்ளனர்.
இவற்றின் வழியாக, விண்ணப்பதாரர்களின் தரவுகளை சேகரித்து, முறைகேடுகளில் ஈடுபடுவதுடன், சேவைகளுக்கான சந்திப்பை உறுதிப்படுத்த, அதிக கட்டணத்தை வசூலிப்பது உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோசடி கும்பல் முக்கியமாக, www.indapassport.org ; www.online-passportindia.com ; www.passportindiaportal.in; www.passport-seva.in ; www.applypassport.org; www.passport-inda என்ற இணையதளங்களில் இயங்குகின்றன.
இதுபோன்ற இணைய தளங்களிடம் இருந்து, விண்ணப்பதாரர்கள் எச்சரிக்கையாக, விலகி இருக்க வேண்டும்.
பாஸ்போர்ட் தொடர்புடைய அனைத்து சேவைகளுக்கும், www.passportindia.gov.in என்ற இணையதளம் அல்லது, mPassport Seva என்ற மொபைல் போன் செயலியை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.