மாஞ்சோலையில் தற்போதைய நிலை தொடர வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
மாஞ்சோலையில் தற்போதைய நிலை தொடர வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 21, 2024 09:47 PM
மதுரை:திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு உதவி கோரிய வழக்கில், 'அங்கு தற்போது எந்த நிலை உள்ளதோ அதே நிலை தொடர வேண்டும். தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மாஞ்சோலையை சேர்ந்த அமுதா என்பவர், தாக்கல் செய்த பொதுநல மனு:
மாஞ்சோலையில் 'பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் - பி.பி.டி.சி.,' நிறுவன தேயிலை தோட்டத்தில் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை செய்கிறோம். குத்தகை காலம் 2028 பிப்., 11ல் முடிகிறது. குத்தகை காலம் முடிவதற்கு முன்பே நிறுவனம் எங்களை வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எங்களுக்கென சொந்த நிலம், வீடு எங்கும் இல்லை. தற்போது 700 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்.
எங்களின் மறுவாழ்விற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3 சென்ட் இலவச வீட்டுமனை பட்டாவை திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் வழங்க வேண்டும். அரசு வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அதுபோல, மாஞ்சோலை நாலுமுக்கு எஸ்டேட் ஜான் கென்னடி என்பவர், 'மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசின் தேயிலை தோட்டக் கழகம் ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும்' என, மற்றொரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்களை, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பு: பி.பி.டி.சி.,நிறுவனம் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை, தேயிலை தோட்டமாக மாற்றியது. இது, உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது. இதனால், இடத்தை காலி செய்யுமாறு அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மாஞ்சோலையில் 568 தொழிலாளர்கள் உள்ளனர். நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது. அதை தொழிலாளர்களில் 20 சதவீதம்பேர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இந்த தொழிலாளர்களுக்கு வீடுகள் அமைத்து தருமாறு மனுதாரர் தரப்பு கோருகிறது. அத்திட்டம் இத்தொழிலாளர்களுக்கு பொருந்தாது. தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: மாஞ்சோலையில் தற்போது எந்த நிலை உள்ளதோ அதே நிலை தொடர வேண்டும். தற்போதைய நிலை குறித்து தமிழக அரசு தரப்பில் ஜூலை 8ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

