அரசு ஊழியர் சட்ட விதிகளில் திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு
அரசு ஊழியர் சட்ட விதிகளில் திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு
ADDED : மார் 07, 2025 12:44 AM

சென்னை:அரசு ஊழியர்கள் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு, 1973ல் நடத்தை விதிகள் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. அதில், புதிய திருத்தங்களை, அரசு மேற்கொண்டுள்ளது.
அதன்படி, அரசு அலுவலக வளாகங்களிலோ, அதையொட்டியோ அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலம், கூட்டம் நடத்தக் கூடாது; உரையாற்றக் கூடாது என்பது உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு சலுகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ரக் ஷித், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜாக்டோ - ஜியோ: அ.தி.மு.க., ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய போது, அந்த களத்திற்கே வந்து ஆதரவு தெரிவித்தவர் முதல்வர் ஸ்டாலின்.
இப்போது போராடக்கூடாது என நடத்தை விதிகளில் திருத்தம் செய்து, அவரது ஆட்சியில் வெளியிட்டு இருக்கின்றனர். அரசு ஊழியர்களை போலவே, முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் இந்த விதிகள் பொருந்துமா என்ற கேள்வி எழுகிறது.
அமிர்தகுமார், மாநில தலைவர், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்: தமிழக அரசு அலுவலர்கள் நடத்தை விதிகளில், தேவையற்ற திருத்தங்களை செய்து, அரசின் மனிதவள மேலாண்மை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட, 'டெஸ்மா, எஸ்மா' போன்ற அடக்குமுறை சட்டங்களை, இது நினைவுப்படுத்துகிறது. திருத்தங்களை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.