ADDED : ஜூன் 23, 2024 03:53 AM

சென்னை: 'தினமலர்' நாளிதழ் சார்பில், சென்னையில் நேற்று நடந்த இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில், மாணவ - - மாணவியர் மற்றும் பெற்றோர் திரளாக பங்கேற்றனர். கவுன்சிலிங்கில் கல்லுாரிகளை தேர்வு செய்வது குறித்து, நிபுணர்கள் விரிவான விளக்கம் அளித்தனர்.
பிளஸ் 2 முடித்து, தமிழக அரசின் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழியே, இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், 'தினமலர்' நாளிதழுடன், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து, வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.
சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் காலையிலும், தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள டி.ஜி.பி., கல்யாண மண்டபத்தில், பிற்பகலிலும், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியின் செயலர் புருஷோத்தமன் பங்கேற்று, ஆன்லைன் கவுன்சிலிங்கின் விதிமுறைகள், 'சாய்ஸ் பில்லிங்' என்ற கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளின் விருப்ப பட்டியல் தயாரித்தல், சரியான கல்லுாரிகளை தேர்வு செய்தல் போன்றவை குறித்து, 'பவர் பாயின்ட் பிரசன்டேஷனுடன்' விளக்கம் அளித்தார்.
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம் பங்கேற்று, மாணவர்களின் திறன் வளர்ப்பு, வளாக நேர்காணல், அதிக சம்பளத்தில் வேலைக்கு சேருவதற்கான முன் தயாரிப்புகள் போன்றவை குறித்து, மாணவர்களுக்கு விரிவான ஆலோசனை வழங்கினார்.
கல்வி ஆலோசகர் அஸ்வின் பங்கேற்று, எந்தெந்த, 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு, எந்த கல்லுாரி, எந்த பாடப்பிரிவு கிடைக்கும்; வேலைவாய்ப்புகள் அதிகமான பாடப்பிரிவுகள் எவை என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் தொடர்பாக, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பல்வேறு சந்தேகங்களுக்கு, நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.
மேலும், இன்ஜினியரிங் படிக்கும் போதே, கூடுதல் திறன்களை வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
'சாய்ஸ் பில்லிங்'கில் கவனம்
தமிழக இன்ஜினியரிங் கமிட்டி செயலர் புருஷோத்தமன் பேசியதாவது:
இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு, விண்ணப்பக் கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றிய மாணவர்களுக்கு, பல்வேறு கட்ட சான்றிதழ் சரிபார்ப்பை, ஆன்லைன் வழியில் நடத்தியுள்ளோம். கூடுதல் சான்றிதழ் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மட்டும், கவுன்சிலிங் உதவி மையங்களுக்கு வரவழைக்கப்படுவர். மற்ற மாணவர்கள் உதவி மையங்களுக்கு வர வேண்டாம்.
மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், பொதுவான மற்றும் இட ஒதுக்கீட்டிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். தரவரிசையில் ஆட்சேபனை இருந்தால், குறைகளை தீர்க்க மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அதன்பின், தரவரிசை வாரியாக ஆன்லைன் கவுன்சிலிங் அறிவிக்கப்படும்.
இதில், விருப்ப கல்லுாரிகளை தேர்வு செய்யும் சாய்ஸ் பில்லிங் முறைக்கு, போதிய அவகாசம் அளிக்கப்படும். கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தரவரிசைப்படுத்துவதில், மாணவர்களும், பெற்றோரும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் எத்தனை சாய்ஸ் வேண்டுமென்றாலும் பதிவு செய்யலாம்.
கடந்த ஆண்டு, ஒரு மாணவர், 827 'சாய்ஸ்' கொடுத்திருந்தார். ஆனால், அவருக்கு, 12வது விருப்பத்திலேயே இடம் கிடைத்து விட்டது. அதேபோல, விருப்ப இடம் கிடைத்ததும், அதை உறுதி செய்ய வேண்டியது முக்கியமாகும். உறுதி செய்யாவிட்டால் இடம் கிடைக்காது.
இடம் ஒதுக்கீடு கிடைத்ததும், மாணவர்கள் நிர்ணயிக்கப்படும் நாட்களுக்குள், கல்லுாரிகளுக்கு சென்று, சான்றிதழ் அளித்தும், கட்டணம் செலுத்தியும், இடத்தை உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்யாவிட்டால் காலியாகும் இடங்கள், அடுத்த சுற்று மாணவர்களுக்கு வழங்கப்படும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசு ஒதுக்கீட்டிலும், பொது ஒதுக்கீட்டிலும் இடங்கள் ஒதுக்கப்படும். அரசு ஒதுக்கீட்டில் எந்த கல்லுாரியில் சேர்ந்தாலும், அந்த மாணவருக்கான கல்லுாரி செலவுகள் அனைத்தையும் அரசே கவனிக்கும்.
பொது ஒதுக்கீட்டில் பெறப்படும் இடங்களுக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, வேறு சலுகைகள் கிடையாது. கவுன்சிலிங் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும், https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
'பெயர் குழப்பம் வரும்!'
இன்ஜினியரிங் கமிட்டி செயலர் புருஷோத்தமன் பேசியதாவது:
கல்லுாரி பெயர்களை பொறுத்தவரை, ஒரே பெயருடன் சிறிய எழுத்து மாற்றங்களுடன், ஒன்றுக்கு மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. இதில், பெயர் குழப்பம் ஏற்பட்டு, தங்களுக்கு தெரியாத கல்லுாரிகளை தேர்வு செய்யும் நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, கல்லுாரிகளின் பெயர்களை சரிபார்ப்பதுடன், கல்லுாரி குறியீட்டு எண்ணையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாடப்பிரிவுகளுக்கான குறியீட்டு எண்ணையும் தெரிந்து கொள்ள வேண்டும். விண்ணப்ப பதிவின் போது உருவாக்கப்படும் பயன்பாட்டாளர் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை வேறு யாருக்கும் தர வேண்டாம். அதனை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
'கூடுதல் மொழியும், திறனும் முக்கியம்!'
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீராம் பேசியதாவது:
சிறந்த நிறுவனத்தில், அதிக சம்பளத்தில் வேலை என, மாணவர்கள் தங்கள் இலக்கை பெரிதாக நிர்ணயிக்க வேண்டும். அதற்கேற்ற முன் தயாரிப்புகளும் அவசியம். நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற திறன்களை வளர்த்து, நம்மை தகுதியாக்கிக் கொண்டால் மட்டுமே, மாணவர்கள் தங்கள் இலக்கை எட்ட முடியும்.
தற்போதைய புதிய வேலைகள் என்ன; தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதலாக என்ன படிக்க வேண்டும்; இளநிலை முடித்த பின், முதுநிலை படிப்பில் சேர, 'கேட்' தேர்வில் பங்கேற்க மேற்கொள்ள வேண்டிய முன் தயாரிப்பு, 'இன்டெர்ன்ஷிப்' என்ற தொழில் பழகுனர் பயிற்சிக்கு செல்வது எப்படி, அதில், நமது திறமையை வளர்த்துக் கொள்ளும் முறை என, பல்வேறு வழிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
சாப்ட்வேரில், 'கோடிங்' அறிவை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். 'ரெஸ்யூம்' என்ற வேலை கேட்கும் விண்ணப்பம் தயார் செய்வது எப்படி, வெளிநாடுகளில் எந்த வகை வேலைகளுக்கு அதிக ஆட்கள் தேவைப்படுகின்றனர். அதற்கான கூடுதல் மொழிகளை தெரிந்து கொள்வது என, மாணவர்கள் தங்களை பல வகைகளில் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம்மால் முடியுமா என்ற எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல், கூடுதல் திறன்களை வளர்த்து, கூடுதல் மொழிகளை கற்றால், இன்ஜினியரிங் வேலைவாய்ப்பில், நினைத்த சம்பளத்தில் வேலை பெற்று சாதிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
***

