தலைமையால் கைவிடப்பட்ட 'மாஜி' கரூரில் ஆதரவாளர்கள் அதிருப்தி
தலைமையால் கைவிடப்பட்ட 'மாஜி' கரூரில் ஆதரவாளர்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 11, 2024 10:01 PM
கரூர் அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:
அ.தி.மு.க., பிளவு உட்பட பல்வேறு பிரச்சனையின் போது, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்தார். அவர்கள், இரண்டு பேருக்கும் இணக்கமான உறவு இருந்து வந்தது. கடந்த சட்டசபை தேர்தலில், மாவட்டத்தில் 'வாஷ்அவுட்' ஆனபின், இருவருக்குமான உறவில் மெல்ல விரிசல் விழுந்தது.
கடந்த 2021ல் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்தபோது, பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். தற்போது நில மோசடி வழக்கில், அவரை கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள், உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் பலரையும் போலீசார் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும், கட்சி தலைமையில் இருந்து கண்டன அறிக்கை வெளியிட வேண்டும்; போராட்டம் அறிவிக்க வேண்டும் என, கரூர் மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு, 'அவரது தனிப்பட்ட வழக்கு என்பதால், கட்சி தலையிட முடியாது; அவர் தான் பார்த்து கொள்ள வேண்டும்' என, தலைமை கைவிரித்துள்ளது. இதனால், எம்.ஆர்., விஜயபாஸ்கரின் குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

