கூட்டுறவு சங்க பணியாளர்கள் சொத்து விபரம் கணக்கெடுப்பு
கூட்டுறவு சங்க பணியாளர்கள் சொத்து விபரம் கணக்கெடுப்பு
ADDED : ஆக 10, 2024 02:58 AM
சென்னை:கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களின் அசையும், அசையாச் சொத்து விபரங்களை சேகரிக்கும் பணியில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான விபரங்களை முறையாக பராமரிக்க, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவுத் துறையின் கீழ், மத்திய கூட்டுறவு சங்கங்கள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் என, பல்வேறு சங்கங்கள் உள்ளன. இந்தச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள், ஒவ்வொரு ஆண்டும் தங்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் விபரங்களை, மார்ச் 31க்குள் சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும். இந்த பதிவேட்டை, சங்கங்கள் முறையாக பராமரிக்க வேண்டும்.
ஆனால், பல சங்கங்கள் பணியாளர்களின் சொத்து விபரங்களை முறையாக பராமரிக்கவில்லை.
எனவே, ஒவ்வொரு சரக துணை பதிவாளரும், அவருடைய சரகத்தில் உள்ள பணியாளர்களின் சொத்து விபரங்களை பெற்று, முறையாக பராமரித்து வருவதை உறுதி செய்து, மண்டல இணை பதிவாளர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக் கூட்டுறவு கடன் வங்கி பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் காமராஜ் பாண்டியன் கூறுகையில், ''அரசு ஊழியர்களின் சொத்து விபரங்களை அரசுக்கு தெரிவிப்பதில் ஆட்சேபம் இல்லை. ஆனால், அசையும், அசையா சொத்து விபரங்களை எப்படி வழங்குவது யாரிடம் வழங்குவது என்ற தெளிவான விபரங்களை, கூட்டுறவு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை; இதை சரியாக தெரிவிப்பதுடன், சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்,'' என்றார்.